
வளர்ச்சியில் இந்தியாவை மிஞ்ச முடியவில்லை என்றால் தனது பெயரை மாற்றிக் கொள்வதாகப் பேசியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்.
அண்மையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காஸி கான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தார் அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப். இந்த விழாவில், பாகிஸ்தானையும், இந்தியாவையும் ஒப்பிட்டு அவர் பேசியதாவது,
`இந்தியாவை பின்னுக்குத் தள்ளவில்லை என்றால், எனது பெயர் ஷெபாஸ் ஷெரிஃப் அல்ல. பாகிஸ்தானை சிறந்த நாடாக மாற்றி, இந்தியாவை மிஞ்சுவோம். நான் நவாஸ் ஷெரிஃபின் ரசிகன் என்பது மட்டுமல்லாமல் அவரைப் பின் தொடர்பவன்.
அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையின் மீது நான் சத்தியம் செய்கிறேன். பாகிஸ்தானைப் பெருமையான இடத்திற்கு கொண்டு செல்லவும் இந்தியாவைத் தோற்கடிக்கவும், ஆற்றலும் விருப்பமும் உள்ள நாள் வரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என்றார்.
தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மை நிலவினாலும், தீவிரவாதத்தை ஒழிக்கும் வரை பாகிஸ்தானின் முன்னேற்றத்திற்கு வாய்ப்பு இல்லை எனவும் இந்த விழாவில் பேசியுள்ளார் பிரதமர் ஷெரிப்.
சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற ஷெபாஸ் ஷெரிஃப், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளையும் பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியாவுடன் பேசித் தீர்க்க விரும்புவதாக பேசினார்.