
தேவைப்பட்டால் அமெரிக்காவின் ஆதரவுடன் ஹமாஸ் மீது மீண்டும் தாக்குதலைத் தொடங்கும் உரிமை உள்ளதாக அறிவித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
கடந்த 2023 அக்டோபர் 7-ல் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து 251 இஸ்ரேலியர்கள் பிணைக் கைதிகளாக காஸாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதனை அடுத்து, ஹமாஸுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, காஸா பகுதியில் போரைத் தொடங்கியது இஸ்ரேல்.
இந்தப் போரால் இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காஸா பகுதியில் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், காஸா போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் இரு தரப்புக்கும் இடையே ஈடுபட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் கடந்த வாரம் உடன்பாடு ஏற்பட்டது.
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, இஸ்ரேல் நேரப்படி, இன்று (ஜன.19) காலை 8.30 மணிக்கு அதிகாரபூர்வமாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. பிணையக் கைதிகள் விடுவிப்பு, ராணுவத்தைத் திரும்பப் பெறுவது, இறந்தவர்களின் உடல்களைத் திரும்பப் பெறுவது என மூன்று கட்டங்களாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அறிவிக்கப்பட்டபடி இன்று காலை போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரவில்லை. காஸா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலியர்களின் பெயர்ப் பட்டியலைக் கொடுத்தால் மட்டுமே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகும் என அறிவித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. காணொளி வாயிலாக பிரதமர் நெதன்யாகு கூறியதாவது,
`ஹமாஸ் விடுவிக்கவுள்ள பிணையக் கைதிகளின் பட்டியலை வழங்கினால் மட்டுமே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகும். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதை இஸ்ரேல் பொறுத்துக்கொள்ளாது. ஹமாஸ் மட்டுமே இதற்கு முழு பொறுப்பு. அமெரிக்காவின் ஆதரவுடன் போரை மீண்டும் தொடங்கும் உரிமை எங்களுக்கு உள்ளது’ என்றார்.