
எனது தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் மக்களுக்கான போராட்டத்தை நான் நிறுத்தப்போவதில்லை என தன் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிஸ்.
47-வது அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்வதற்காக தேர்தல் வாக்குப்பதிவு கடந்த (அமெரிக்க தேதிப்படி) நவ.5-ல் நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று (நவ.6) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார் குடியரசுக் கட்சி வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று உரையாற்றியவை பின்வருமாறு,
`எனது மனம் நிறைவாக உள்ளது. என் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கும், நாட்டின் மீதான முழு அன்பிற்கும், மன உறுதிக்கும் எனது நன்றிகள். எனது தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் இந்தத் தேர்தல் பிரச்சாரத்தைத் தூண்டிய போராட்டத்தை நான் நிறுத்தப்போவதில்லை.
அனைத்து மக்களுக்குமான சுதந்திரம், வாய்ப்பு, கண்ணியம் ஆகியவற்றுக்கான போராட்டத்தை நான் நிறுத்தப்போவதில்லை. இருளாக இருக்கும்போதுதான் நட்சத்திரங்களைக் காண முடியும். நாம் இருளடைந்த காலகட்டத்துக்குள் நுழைவதாக பலரும் எண்ணுவது எனக்குத் தெரியும். உண்மை, நம்பிக்கை மற்றும் சேவை ஆகிய கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் ஒளியால் வானத்தை நிரப்புவோம்.
இத்தகைய தேர்தல் முடிவை நாம் விரும்பவில்லை. இதற்காக நாம் போராடவில்லை. இதற்காக நாம் வாக்களிக்கவில்லை. நாம் கைவிடாமல் போராடும்வரை அமெரிக்காவுக்கான வாக்குறுதியின் ஒளி எப்போதும் பிரகாசமாக எரியும். இந்தத் தேர்தல் முடிவுகளை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.
அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்பிடம் பேசி, அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் என்று அவருக்கு நான் உறுதியளித்திருக்கிறேன்’ என்றார்.