

பிப்ரவரி 28-ல் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தத் தொடங்கியதும், ஈரான் முதலில் கை வைத்த இடம் ஹார்முஸ் நீரிணைதான். உலக வரைபடத்தில் ஓவியர் வரைந்த தூரிகை வளைவைப்போல் இருக்கும் இந்த ஹார்முஸ் நீரிணை, ஓர் இயற்கை அதிசயம் என்கிறார்கள் உலகியலாளர்கள்.
வரைபடத்தில் ஒரு சிறு கீறல் போலத் தோன்றும் ஹார்முஸ் நீரிணை, உண்மையில் பூமியின் மாபெரும் சக்திகள் மோதிக்கொண்டதால் உருவான ஒரு புவியியல் அதிசயம். வளைகுடா நாடுகளையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் இந்த குறுகிய நீர்ப்பாதை, வெறும் கடல் வழி மட்டுமல்ல; அது கோடிக்கணக்கான ஆண்டுகாலப் பூமியின் வரலாற்றைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஒரு காலப் பெட்டகம். ஒருபுறம் ஈரானின் கரடுமுரடான மலைத்தொடர்கள், மறுபுறம் ஓமனின் தீபகற்ப முனைகள் என இயற்கையின் பிரம்மாண்டமான கைகளுக்கு நடுவே சிக்கிய ஒரு சிறு நீர்ப்பாதை இது. சுமார் 21 முதல் 30 மைல் அகலமே கொண்ட இந்தச் சிறிய இடைவெளி, எப்படி உருவானது? இதன் ஆழத்தில் புதைந்துள்ள புவியியல் ரகசியங்கள் என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் வெறும் மனித வரலாற்றில் மட்டுமல்ல, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பூமியின் வரலாற்றில் பொதிந்துள்ளன.
ஹார்முஸ் நீரிணையின் பிறப்பு ஒரு பிரம்மாண்டமான விபத்துடன் தொடங்குகிறது. இதைப் பற்றி விவரிக்கும் நேஷனல் ஜியாக்ரபிக் நிறுவனத்தின் சிறப்புக் கட்டுரையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் மைக் சேர்ல் இதனை புவியியல் அற்புதம் என்று அழைக்கிறார்.
என்ன விபத்து? என்ன அற்புதம்?
15,000 ஆண்டு காலம் பின்னோக்கிச் செல்வோம். இன்று ஹார்முஸ் என்ற நீரிணையை வைத்து நாடுகள் மோதிக் கொண்டிருக்கின்றன. அன்று இரு கண்டங்களின் மோதலால்தான் ஹார்முஸ் நீரிணையே உருவானது. மோதலில் தொடங்கி மோதலில் தொடரும் விசித்திரம் - ஹார்முஸ்.
சுமார் 30 மைல் அகலமே கொண்ட இந்தப் பாதை உருவாகக் காரணம், இரண்டு கண்டத் தட்டுகள், அதாவது Tectonic Plates, ஒன்றோடொன்று மோதிக்கொண்டதுதான். புவியியல் ஆராய்ச்சியாளர் ஆலன், இதைப்பற்றிக் கூறும்போது, இரு கண்டங்களின் தட்டுகள் மோதிக் கொள்வதை ஒரு கார் விபத்துடன் ஒப்பிடலாம் என்கிறார். அதாவது இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் போது, அவற்றின் முன்பகுதிகள் எப்படி நசுங்கி, மேலெழும்புமோ, அதேபோல அரேபிய தட்டும் யூரேசிய தட்டும் மோதிக்கொண்டன. இந்த மாபெரும் அழுத்தத்தினால் நிலப்பரப்பு சுருங்கி, தடிமனாகி, இன்று நாம் காணும் ஈரானின் ஜாக்ரோஸ் மலைத்தொடர்கள் உருவாகின.
இப்படி நிலத்தட்டுகள் மோதியவுடன் மலைகள் மட்டும் உருவாகவில்லை; ஒரு சுவாரஸ்யமான புவியியல் மாற்றமும் நிகழ்ந்தது. வளைக்கக்கூடிய ஸ்கேல் ஒன்றின் ஒரு முனையில் கனமான பொருளை வைத்தால், அப்பகுதி கீழே இறங்குமல்லவா? அதுபோலவே, ஜாக்ரோஸ் மலைத்தொடர்களின் பெரும் பாரம் அழுத்தியதில், அரேபிய தட்டின் ஒரு பகுதி கீழ்நோக்கி அமிழ்ந்தது. இந்த அமிழ்ந்த பள்ளத்தில் கடல் மட்டம் தன் கைவரிசையைக் காட்டியது. புவியியல் ரீதியாகப் பார்த்தால் மிகக் குறுகிய காலத்தில் கடல் நீர் உயர்ந்து, ஈராக் வரையிலும் நிலப்பரப்பை ஆக்கிரமித்தது. இதுதான் இன்றைய ஹார்முஸ் நீரிணையை நிரந்தர நீர்ப்பாதையாக மாற்றியது.
கடல் மட்டத்தின் கைவரிசை
ஹார்முஸ் நீரிணையை உருவாக்கியதில் உலகின் கடைசிப் பனிக்காலம் அதாவது Ice Age-க்கு முக்கிய பங்குண்டு. உலகம் கடைசி பனிக்காலத்திலிருந்து (Ice Age) மெதுவாக விடுபடத் தொடங்கியது. துருவப் பகுதிகளில் உறைந்து கிடந்த பனிப்பாறைகள் உருகத் தொடங்கின. இதனால் உலகெங்கும் கடல் மட்டம் மளமளவென உயர்ந்தது. ஏறத்தாழ 15,000 ஆண்டுகளில் கடல் மட்டம் 100 மீட்டர் வரை உயர்ந்தது. இந்த நீர் உயர்வுதான் ஹார்முஸ் நீரிணை வழியாக உட்புகுந்து, ஆழமற்ற பள்ளத்தாக்குகளாக இருந்த பகுதிகளை நிரப்பி பாரசீக வளைகுடாவை உருவாக்கியது. நிலத்தில் இருந்த ஆழமான நதிப் பள்ளத்தாக்குகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் ஹார்முஸ் நீரிணை உருவாகி இருக்கிறது. இன்று நாம் காணும் இந்த நீர்ப்பாதை, பனிக்கட்டிகள் உருகி ஓடியதால் பூமிக்குக் கிடைத்த ஒரு பரிசு.
உப்புப் பாறைகள்
ஹார்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள புவியியல் அமைப்புகளில் உப்புப் பாறைகளும் உப்புக் குமிழ்களும் நிறைந்திருப்பது வியப்புக்குரியதாகும். சாதாரணமாகப் பனிப்பாறைகள் என்றால் அவை உறைந்த நீரால் ஆனவை என்று நாம் அறிவோம். ஆனால், இங்கே நிலப்பரப்பிலிருந்து உப்பு ஒரு திரவம் போலக் கசிந்து வெளியேறி உறைந்து பாறைகளாகக் காட்சி அளிக்கின்றன. இது எப்படிச் சாத்தியம்? கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், இந்தப் பகுதி ஆழமற்ற கடல்களால் சூழப்பட்டிருந்தது. தட்பவெப்ப மாற்றங்களால் அந்தக் கடல் நீர் ஆவியானபோது, நிலத்தினடியில் தடிமனான உப்புப் படிமங்கள் எஞ்சின. காலப்போக்கில் இந்தப் படிமங்களுக்கு மேலே மணலும் பாறைகளும் படிந்து அவற்றைப் பூமிக்கு அடியில் புதைத்தன. கண்டத் தட்டுகள் மோதத் தொடங்கியபோது, நிலத்திற்கு அடியில் இருந்த பாறைகள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகின. உப்பு என்பது சுற்றியுள்ள பாறைகளை விட அடர்த்தி குறைவானது. எனவே, மேலிருந்து பாறைகள் அழுத்தும் போது, ஒரு பற்பசை குழாயை நாம் கீழிருந்து அழுத்தினால் உள்ளே இருக்கும் பற்பசை எப்படி வெளியேறுமோ, அதேபோல நிலத்தினடியில் இருந்த உப்பு, பாறைகளின் இடுக்குகள் வழியாக மேல்நோக்கித் தள்ளப்பட்டது. அவ்வாறு வெளியேறிய உப்பு, மலைச்சரிவுகளில் வழிந்தோடி 'உப்புப் பனிப்பாறைகளை' உருவாக்கி இருக்கிறது. இந்தப் புவியியல் நிகழ்வு ஹார்முஸ் நீரிணைப் பகுதியின் நிலப்பரப்பை மற்ற இடங்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுகிறது. ஹார்முஸ் நீரிணையின் ஒரு கரையில் ஓமனின் முசண்டம் தீபகற்பம் அமைந்துள்ளது. இது புவியியலாளர்களுக்கு ஒரு திறந்தவெளி ஆய்வகம் போன்றது.
முசண்டம் தீபகற்பம்
இந்தப் பகுதியில் காணப்படும் பாறைகள் மிகவும் விசித்திரமானவை. பொதுவாகப் பூமியின் மேலோட்டிற்கு மிக ஆழத்தில், அதாவது கடலின் தரைப்பகுதிக்கும் கீழே பல்லாயிரம் கிலோமீட்டர் ஆழத்தில்தான் 'ஓபியோலைட்' எனப்படும் பாறைகள் காணப்படும். ஆனால், முசண்டம் தீபகற்பத்தில் இந்தப் பாறைகள் நிலப்பரப்பிலேயே தென்படுகின்றன. இது ஒரு உலக அதிசயம் என்கிறார் பேராசிரியர் மைக் சேர்ல். பூமியின் உட்பகுதியை, அதன் ஆழமான ரகசியங்களை நிலத்தின் மேல் நின்றுகொண்டே பார்ப்பதற்கான வாய்ப்பை இந்தப் பாறைகள் வழங்குகின்றன. கண்டங்களின் மோதல் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு இதுவே சாட்சி. கடலுக்கு அடியில் இருக்க வேண்டிய நிலப்பரப்பை, ஒரு மாபெரும் சக்தியானது அப்படியே மேலே தூக்கி எறிந்திருக்கிறது. இந்தக் கருப்பு நிறப் பாறை முகடுகளும், செங்குத்தான சரிவுகளும் ஹார்முஸ் நீரிணையின் கம்பீரமான அடையாளங்களாகத் திகழ்கின்றன.
வளைகுடா எண்ணெய்க்கும் இதுதான் காரணம்
ஹார்முஸ் நீரிணை இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்குக் காரணம் அங்குள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம். இந்த ஹார்முஸ் நீரிணை வரைபடத்தைக் கவனியுங்கள். உட்குழிந்திருக்கும் இந்த அமைப்பின் பெரும்பகுதி ஈரான். ஒரு முனையில் ஈராக், குவைத்.. அப்படியே கீழிறங்கி வந்தால் சவுதி அரேபியா, கத்தார். வளைந்திருக்கும் குறுகலான அமைப்பின் விளிம்பில் ஐக்கிய அரபு அமீரகம், ஒமான், மஸ்கட். இப்படிச் சுற்றியும் வளைகுடா நாடுகள். உலகத்திற்குக் கறுப்புத் தங்கம் எனப்படும் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து அனுப்பும் நாடுகள். ஹார்முஸ் நீரிணை இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்குக் காரணம் அங்குள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம். ஆனால், இந்த வளம் அங்கு உருவாவதற்கும் புவியியல் மாற்றங்களே காரணம். கண்டத் தட்டுகள் மோதியபோது நிலப்பரப்பு வெறும் மலையாக மட்டும் மாறவில்லை; அது பூமிக்கு அடியில் பல 'பொறிகளை' அதாவது Traps களை உருவாக்கியது. பாறைகள் மடியும்போதும், பிளவுபடும்போதும் நிலத்தினடியில் வெற்றிடங்கள் அல்லது குறிப்பிட்ட அமைப்புகள் உருவாகின்றன. இந்த அமைப்புகளுக்குள் பல மில்லியன் ஆண்டுகளாகப் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு சிக்கிக்கொண்டன. ஹார்முஸ் பிராந்தியத்தில் உருவான இந்த நிலத்தடிப் பொறிகள் மிகவும் பிரம்மாண்டமானவை. பேராசிரியர் சேர்ல் விளக்குவது போல, உலகின் பிற பகுதிகளில் உள்ள எண்ணெய் கிணறுகள் சில ஆண்டுகளில் வற்றிப்போகும். ஆனால், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் உள்ள வயல்கள் பல தசாப்தங்களாகத் தடையின்றி எரிபொருளை வழங்கிக்கொண்டே இருக்கின்றன. இயற்கையின் இந்த மாபெரும் சேமிப்பு அறைதான் ஹார்முஸ் நீரிணையை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளது.
ஹார்முஸுக்கும் அழிவுண்டு
நேஷனல் ஜியோகிராபிக்கின் சிறப்புக் கட்டுரைக்காகப் பல்வேறு தகவல்களை வழங்கியிருக்கும் பேராசிரியர் மைக் சேர்ல் விசித்திரமான ஒன்றைச் சொல்கிறார். ஹார்முஸ் நீரிணையில் உள்ள முசண்டம் தீபகற்பம் என்பது வளர்ந்து கொண்டிருக்கும் தீபகற்பம் என்கிறார். 2014-ல் அவரும் அவரது நண்பர்களும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாகச் சொல்கிறார். அதன்படி முசண்டம் தீபகற்பம் வளர்ந்துகொண்டே இருப்பதால் விரைவில் இரு கண்டத் தட்டுகளும் சேரும். ஹார்முஸ் நீரிணை நிரந்தரமாக மூடிக்கொள்ளும். எப்போது? என்றால் இது ஏதோ நாளை, அடுத்த மாதம், அடுத்த ஆண்டு என்றில்லை... இது நிகழ்வதற்கு குறைந்தபட்சம் 10 மில்லியன் ஆண்டுகள் ஆக வேண்டும் என்று கணக்குப் போடுகிறார். அப்போது மனிதகுலத்திற்கு எந்த எண்ணெய் தேவைப்படுமோ?
The Strait of Hormuz was formed by the collision of tectonic plates, which created mountains and reshaped the land. Rising sea levels after the last Ice Age flooded the region, turning it into a vital waterway. Its unique geology includes salt formations and deep Earth rocks exposed on the surface. These processes also trapped large reserves of oil and gas, making it globally important. Over millions of years, the strait may eventually close due to ongoing tectonic movement.