
ஸ்பெயின் நாட்டின் கிழக்குக் கடலோர மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இலையுதிர் காலத்தின்போது ஒவ்வொரு வருடமும் பொதுவாகவே மழை பெய்யும். ஆனால் கடந்த வாரத்தின் மத்தியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அந்நாட்டின் கிழக்குப் மாகாணமான வெலென்சியாவில் கிட்டத்தட்ட 205 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
மத்திய தர கடலை ஒட்டியுள்ள ஸ்பெயினின் வெலென்சியாக மாகாணம் வெயில் கால சுற்றுலாவுக்குப் பேர் போன பகுதியாகும். இந்த கனமழையால வெலென்சியா மாகாணத்தின் பல ஊரக கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின.
வெலென்சியாவின் சிவா (chiva) பகுதியில் மட்டும் 4 மணிநேரத்தில் சுமார் 320 மி.மீ. மழை பெய்துள்ளது. இதைப் போன்ற ஒரு மழை வெள்ளத்தை தன் 100 வயது தந்தை அவரது வாழ்நாளில் பார்த்தது இல்லை என ஜோஸ் ப்ளாடெரோ என்பவர் சி.என்.என். செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.
வெள்ள பாதிப்பை அடுத்து 500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வெலென்சியாக மாகாணத்தின் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ராணுவம் நேற்று (நவ.1) தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் பல இடங்களில் ஹெலிகாப்டரில் சென்று மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மழை வெள்ளத்தின் மத்தியில்தான் தங்களுக்கு அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டினர்.
ஸ்பெயின் நாட்டின் அவசரகால எச்சரிக்கை அமைப்பு தோல்வியடைந்ததே இத்தகைய அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்ததற்குக் காரணம் என இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் நீரியல் பேராசிரியரான ஹன்னா க்ளோக் கருத்து தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது அரசு தகுந்த உதவிகளை வழங்கும் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் அறிவித்துள்ளார். அதே நேரம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் சான்ச்செஸ் அறிவுறுத்தியுள்ளார்.