
ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்.
மத்திய கிழக்கில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா பகுதியில் செயல்பட்டுவரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பைக் குறிவைத்து, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தீவிர தாக்குதல் நிகழ்த்தி வருகிறது இஸ்ரேல் ராணுவம்.
இதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கினாலும், தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. அதேநேரம் ஏமன் நாட்டில் செயல்படும் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களின் தளங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது இஸ்ரேல்.
இந்நிலையில் விமான பயணத்தை மேற்கொள்ளும் வகையில், ஏமன் தலைநகர் சனா விமான நிலையத்திற்கு, ஐநா சபை மற்றும் உலக சுகாதார நிறுவன அதிகாரிகளுடன் நேற்று (டிச.27) சென்றுள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்.
அப்போது சனா விமான நிலையத்தில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல். இதில் இருவர் உயிரிழந்தாலும், அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் டெட்ரோஸ். இந்த நிகழ்வு தொடர்பாக விவரித்துத் தன் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளார் டெட்ரோஸ்.
இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஐநா சபையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ், `சர்வதேச சட்டத்தை மதிக்க இஸ்ரேல் கற்றுக்கொள்ளவேண்டும். பொதுமக்கள் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்தக்கூடாது’ என்றார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவைச் சேர்ந்த டெட்ரோஸ் அதனோம், கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.