
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைவிட அதிகம் கவலைப்படுவதற்கான காரணமாக சட்டவிரோத குடியேற்றம் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, அந்நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியுள்ள நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை நாடுகடத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக வலைதளக் கணக்கில் அதிபர் டிரம்ப் இன்று (மார்ச் 3) வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`புதின் குறித்து கவலைப்படுவதற்கு குறைந்த நேரத்தை நாம் செலவிட வேண்டும். அதைவிட பாலியல் வன்கொடுமை குழுக்கள், போதை மாஃபியாக்கள், கொலைகாரர்கள் என சட்டவிரோத குடியேற்றவாசிகளால் ஏற்படுபவை குறித்து நாம் அதிக நேரம் கவலைப்படவேண்டும். அப்படி செய்தால் ஐரோப்பாவைப் போல நாம் மாறமாட்டோம்’ என்றார்.
சட்டவிரோத குடியேற்றத்தை தாம் வெகுவாக குறைத்துள்ளதாக அதற்கு முன்பு வெளியிட்ட மற்றொரு பதிவில், டிரம்ப் கூறியதாவது,
`நான் அதிபர் பொறுப்பில் இருந்த முழுமையான முதல் மாதமான பிப்ரவரியில், நமது நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வரலாற்றிலேயே மிகவும் குறைவாகும். அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் சட்டவிரோதமாக நுழைய முயன்றதற்காக மொத்தமே 8,326 பேர் மட்டுமே எல்லைப் பாதுகாப்புப் படையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நமது நாட்டின் மீதான படையெடுப்பு முடிந்துவிட்டது’ என்றார்.
அண்மையில், மேரிலாந்து மாகாணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி. வான்ஸ், சட்டவிரோத குடியேற்றத்தால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருவதாகவும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க ஐரோப்பா தவறவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.