ஹார்வர்ட் vs டிரம்ப்: எதனால் பல்கலைக்கழகத்திற்கான நிதி நிறுத்தப்பட்டது?

அமெரிக்க கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆட்சிக்கு வந்தது முதல் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
ஹார்வர்ட் vs டிரம்ப்: எதனால் பல்கலைக்கழகத்திற்கான நிதி நிறுத்தப்பட்டது?
1 min read

அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு அமெரிக்க அரசு வழங்கி வந்த 2.2 பில்லியன் டாலர்கள் நிதியை நிறுத்திவைத்து கடந்த ஏப்.15-ல் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் உத்தரவிட்டது. அத்துடன் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள வரி விலக்கு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை, ஆசிரியர்களைப் பணியமர்த்துதல், கற்பித்தல் வழிமுறைகள் போன்றவற்றில் பெரிதளவில் மாற்றம் கொண்டுவர அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அரசு நிர்வாகம் வழங்கிய அறிவுறுத்தல்களைப் பின்பற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது.

இது குறித்து பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஹார்வர்ட் தலைவர் ஆலன் கார்பெரால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், `எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, தனியார் பல்கலைக்கழகங்கள் என்ன கற்பிக்கவேண்டும் என்பதை எந்த அரசாங்கமும் உத்தரவிடக்கூடாது. சுதந்திரமான செயல்பாட்டையும், அரசியலமைப்பு உரிமைகளையும் பல்கலைக்கழகம் விட்டுக்கொடுக்காது’ என்று எழுதியுள்ளார்.

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மீதான டிரம்ப் நிர்வாகத்தின் இந்த கெடுபிடிகளுக்குக் காரணமாக காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கைகாட்டப்படுகிறது. இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போக்கை மாற்றும் வகையில், அமெரிக்க கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆட்சிக்கு வந்தது முதல் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

முன்னதாக அரசின் அறிவுறுத்தல்களை ஏற்காததற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கான 400 பில்லியன் டாலர்கள் நிதி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான நிதி நிறுத்தப்பட்டுள்ளது.  

ஹார்வர்ட் பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயலைப் பாராட்டியுள்ள முன்னாள் அதிபரும், ஹார்வர்ட் மாணவரும் பாரக் ஒபாமா, `கல்விச் சுதந்திரத்தை நசுக்கும் சட்டவிரோதமான மற்றும் முரட்டுத்தனமான முயற்சியை நிராகரித்துப், பிற உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஹார்வர்ட் முன்மாதிரியாக நடந்துகொண்டுள்ளது. பிற உயர்கல்வி நிறுவனங்களும் இதைப் பின்பற்றும் என்று நம்புவோம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in