
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது ஈரான் அரசு.
இன்றைய பாலஸ்தீனின் காஸா பாகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மத குருவான ஷேக் அஹ்மத் யாசின் 1987-ல் ஹமாஸ் இயக்கத்தைத் தொடங்கினார். யூதர்களைக் கொலை செய்வதும், இஸ்ரேலை அழித்து அங்கே இஸ்லாமிய சமூகத்தை நிறுவுவதையும், தங்கள் அமைப்பின் பிரதான கொள்கையாக 1988-ல் வெளியிட்டது ஹமாஸ்.
ஹமாஸ் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இஸ்மாயில் ஹனியா, 1989-ல் நடந்த முதல் பாலஸ்தீன எழுச்சியின்போது இஸ்ரேலால் கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 1992-ல் சிறையிலிருந்து வெளிவந்ததும், ஹமாஸ் அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு அதில் படிப்படியாக உயர்ந்தார் ஹனியா.
பாலஸ்தீனர்களின் தனிப்பெரும் தலைவரும், பாலஸ்தீன் தேசிய அமைப்பின் தலைவருமான யாஸர் அராஃபத் 2004-ல் மறைந்தார். யாஸர் அராஃபத்தின் மறைவுக்குப் பிறகு 2005-ல் புதிய தலைவரானார் மஹ்மூத் அப்பாஸ்.
2006-ல் ஹமாஸ் அமைப்பின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்த ஹனியாவை பாலஸ்தீன் தேசிய அமைப்பின் பிரதமராக நியமித்தார் மஹ்மூத் அப்பாஸ். பிறகு ஒரே வருடத்தில் அப்பாஸுக்கும், ஹனியாவுக்கும் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக ஹனியாவைப் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் அப்பாஸ்.
இதைத் தொடர்ந்து காஸா பகுதியைத் தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதைச் சுதந்திரமாக நிர்வகிக்க ஆரம்பித்தது ஹமாஸ் அமைப்பு. இதற்குப் பிறகு அவ்வப்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தாக்குதல் நடப்பது வாடிக்கையானது.
2017-ல் ஹமாஸ் அமைப்பின் தலைவரானார் இஸ்மாயில் ஹனியா. மேலும் 2020-ல் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்தபடி செயல்பட்டு வந்தார் ஹனியா.
ஈரான் நாட்டின் புதிய அதிபராக ஜூலை 30 அன்று பதவியேற்றுக் கொண்டார் மசூத் பெஸெஷ்கியான். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடந்த இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்றுவிட்டு தன் வீட்டுக்குத் திரும்பினார் ஸ்மாயில் ஹனியா.
இந்நிலையில் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நடந்த இஸ்ரேலியத் தாக்குதலில் இஸ்மாயில் ஹனியாவும், அவரது மெய்க்காவலர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது ஈரான் அரசு.
2023 அக்டோபர் 7-ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, கடந்த 8 மாதங்களாக பாலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நடந்து வருகிறது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைத் தோற்கடிக்காமல் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.