
ஹெச்-1பி விசா கட்டண உயர்வு குறித்து யாருக்குப் பொருந்தும், யாருக்குப் பொருந்தாது என அமெரிக்க அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை அழைத்துப் பணியமர்த்த நிறுவனங்கள் ஹெச்-1பி விசா திட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் அதிகளவில் இந்தியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஹெச்-1பி விசா திட்டத்தில் கடந்தாண்டு ஒப்புதல் பெற்றவர்களில் ஏறத்தாழ 71 சதவீதத்தினர் இந்தியர்கள் என்கிறது தரவு.
ஹெச்-1பி விசா திட்டத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நபர் ஒருவருக்கு ஆண்டுக் கட்டணமாக 1 லட்சம் அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை முடிவு செய்து அறிவித்தார். செப்டம்பர் 21 முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு இது மிகப்பெரிய இடியாக விழுந்தது. ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதால், அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்களுக்கு இது மிகப் பெரிய சிக்கலாக மாறியது.
மெடா, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை உடனடியாக அமெரிக்காவுக்குத் திரும்ப உத்தரவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. யாரும் அமெரிக்காவைவிட்டு தற்போதைக்கு வெளியேற வேண்டாம் என்றும் நிறுவனங்கள் சில பணியாளர்களைக் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெச்-1பி விசாவுக்கான புதிய கட்டண முறை குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அரசு இதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
"இது ஆண்டுக் கட்டணம் கிடையாது. ஒருமுறை மட்டுமே வசூலிக்கப்படும் விண்ணப்பக் கட்டணம்.
ஹெச்-1பி விசாவை ஏற்கெனவே வைத்திருப்பவர்கள், தற்போதைய நிலையில் அமெரிக்காவுக்கு வெளியே இருந்தால், அவர்கள் மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய 1 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படாது.
ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் வழக்கம்போல அமெரிக்காவைவிட்டு வெளியேறலாம், திரும்பவும் அமெரிக்காவுக்குள் வரலாம்.
இந்த நடைமுறையானது புதிதாக விசா விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே. ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்கும் விசாவை புதுப்பிப்பவர்களுக்கும் இது பொருந்தாது.
அடுத்த லாட்டரி சுழற்சி முறையிலேயே முதல்முறையாக இது அமல்படுத்தப்படும்" என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஹெச்-1பி விசாவை ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் டிரம்பின் புதிய அறிவிப்பால் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்பது தெளிவாகிறது.
H-1B Visa | Donald Trump |