அரசுமுறை சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானா, பார்படோஸ், டொமினிகா நாடுகள் அதன் உயரிய விருதுகளை வழங்குகின்றன.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் நேற்று கலந்துகொண்டு உலகத் தலைவர்களுடன் உரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி. இதைத் தொடர்ந்து இந்திய நேரப்படி இன்று காலை 10 மணி அளவில் மற்றொரு தென் அமெரிக்க நாடான கயானாவுக்குச் சென்றார் மோடி.
இதன் மூலம் கடந்த 56 வருடங்களில் கயானாவுக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமர் எனும் பெருமையைப் பெற்றார் மோடி. கயானா தலைநகர் ஜார்ஜ் டவுன் விமான நிலையத்தில், அந்நாட்டு அதிபர் இர்ஃபான் அலி மற்றும் பிரதமர் மார்க் ஆண்டனி ஃபிலிப்ஸ் ஆகியோர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். கயானாவில் நடைபெறும் இந்தியா-கரீபியன் நாடுகள் கூட்டமைப்பின் 2வது உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் வழங்கிய உதவிகளுக்காக, இந்த உச்சி மாநாட்டில் வைத்து டொமினிகா நாட்டின் மிக உயரிய, `டொமினிகா அவார்டு ஆஃப் ஹானர்’ விருது மோடிக்கு வழங்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கயானாவின் உயரிய விருதான `ஆர்டர் ஆஃப் எக்செலன்ஸ்’ மற்றும் பார்படோசின் உயரிய விருதான `ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படோஸ்’ ஆகிய விருதுகளும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இரு நாட்களுக்கு முன்பு நைஜீரிய அரசின் 2வது உயரிய `கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர்’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் 2014-ல் இந்திய பிரதமராக மோடி பதவியேற்றது முதல் வெளிநாட்டு அரசுகளிடம் இருந்து அவர் பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.