
பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், தங்கள் நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக மீண்டும் பணியில் இணைந்துள்ளதாக கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 2022 முதல் ஜூலை 2024 வரை, கன்சர்வேடிவ் கட்சி சார்பில் இங்கிலாந்து நாட்டுப் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பணியாற்றினார். இந்நிலையில், அவரது புதிய பணி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் அமெரிக்காவின் நியூயார்க்கை தளமாகக் கொண்டு இயங்குகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சாலமன், முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் புதிய பணி தொடர்பாக நேற்று (ஜூலை 8) வெளியிட்ட அறிக்கையில்,
`உலகளவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் (சுனக்) ஆலோசனைகளை வழங்குவார், மேக்ரோ பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிலப்பரப்பில் தனது தனித்துவமான கண்ணோட்டங்களையும் நுண்ணறிவுகளையும் அவர் பகிர்ந்துகொள்வார்’ என்று கூறியுள்ளார்.
கடந்த 2015-ல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகி, தனது அரசியல் வாழ்க்கையை ரிஷி சுனக் தொடங்கினார். பிரதமர் பதவியை வகிப்பதற்கு முன்பு, பிப்ரவரி 2020 முதல் ஜூலை 2022 வரை இங்கிலாந்து கருவூலத்தின் தலைவராக அவர் பணியாற்றினார்.
கடந்தாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது. எனினும், தேர்தலில் வெற்றிபெற்று வடக்கு இங்கிலாந்தில் உள்ள ரிச்மண்ட் மற்றும் நார்த்அல்லர்டன் தொகுதியின் எம்.பி.யாக சுனக் பதவி வகிக்கிறார்.
`தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், அடுத்த நாடாளுமன்றத்தின் முழு காலத்திற்கும் எம்.பி.யாகவே இருப்பேன்’ என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது, சுனக் கூறினார்.
கோல்ட்மேனின் முதலீட்டு வங்கியில் கடந்த 2000-ல் கோடைகால இன்டர்னாக சுனக் பயிற்சி பெற்றார். அதன்பிறகு 2001 முதல் 2004 வரை ஒரு ஆய்வாளராகப் பணியாற்றினார். பின்னர் சர்வதேச அளவிலான நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் ஒரு முதலீட்டு நிறுவனத்தின் வேறு சிலருடன் இணைந்து அவர் தொடங்கினார்.