காஸாவில் குரல் இழந்த குழந்தைகள்: எதிர்காலத்தைப் பழிவாங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீன போர் | Gaza |

இந்தத் தாக்குதல் காஸாவின் கட்டமைப்பை மட்டுமல்ல, அந்த மண்ணின் வருங்காலத் தலைமுறையினரின் மனச்சாட்சியையும் நிரந்தரமாகச் சிதைத்துவிட்டிருக்கிறது...
சித்தரிக்கப்பட்ட ஏஐ படம்
சித்தரிக்கப்பட்ட ஏஐ படம்
3 min read

காஸாவின் தெருக்களில் இன்று விளையாட்டுகளின் சத்தம் இல்லை. கனத்த மௌனம்தான் குடி கொண்டிருக்கிறது. இஸ்ரேலியத் தாக்குதல்களின் கொடூரத்தால், சுமார் 11 லட்சம் பிஞ்சுக் குழந்தைகள் இன்று மனதளவில் சிதைந்து, உளவியல் உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாகச் சொல்கிறது அல் ஜசீரா. அப்படி என்ன நடக்கிறது? விரிவாகப் பார்ப்போம்.

காஸாவில் நிகழ்ந்த குண்டுகளின் பேரிரைச்சல், அங்குள்ள குழந்தைகளின் காதுகளைப் பாதித்ததோடு நின்றுவிடவில்லை. அவர்களின் ஆன்மாவையே உறைந்துபோகச் செய்திருக்கிறது. அதிர்ச்சியால் பேசும் திறனை மெல்ல மெல்ல இழந்து வரும் அந்தக் குழந்தைகளின் மௌனம், உலகிற்கு அவர்கள் விடுக்கும் வலிமையான. அதே நேரத்தில் வேதனை நிறைந்த அறைகூவலாகும்.

அப்படி என்ன செய்தது காஸா போர்?

இந்த அழிவின் வரலாறு, அக்டோபர் 2023-ல் இஸ்ரேல் காஸா மீது தனது முழுமையான தாக்குதலைத் தொடங்கியபோது எழுதப்பட்டது. ஹமாஸ் பயங்கரவாதிகளைப் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை என்று கூறிக்கொண்டு இஸ்ரேல் நடத்திய முழுமையான முற்றுகை, வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை உள்ளடக்கியது. அதுதான் காஸாவைச் சுடுகாடாக மாற்றியது. தொடக்கத்தில் வடக்கு காஸாவை இலக்காகக் கொண்டு பெய்த குண்டுமழை, பின்னர் தெற்குப் பகுதிக்கும் பரவி, தப்பி ஓட வழியின்றி மக்கள் அகதிகளாக அலைக்கழிக்கப்பட்டனர். மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தங்குமிடங்கள் கூட இந்தத் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. 2024, 2025-களில் போர் தீவிரமடைந்தபோது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகளும் பெண்களும்தான். உணவு, நீர் மற்றும் மருந்துகள் தடுக்கப்பட்ட நிலையில், ஒரு தேசமே பட்டினியாலும் நோயாலும் மெல்ல மெல்லச் சாகடிக்கப்பட்டது. 2026-ன் தொடக்கத்தில் தற்காலிக போர்நிறுத்தங்கள் பேசப்பட்டாலும், இடிபாடுகளுக்கு நடுவே மிஞ்சியிருப்பது உயிரிழந்தோரின் உடல்களும் ஆதரவற்ற குழந்தைகளின் மௌனமும்தான். இந்தத் தாக்குதல் காஸாவின் கட்டமைப்பை மட்டுமல்ல, அந்த மண்ணின் வருங்காலத் தலைமுறையினரின் மனச்சாட்சியையும் நிரந்தரமாகச் சிதைத்துவிட்டிருக்கிறது.

காஸாவின் மழலைகள் ஏன் பேச மறுக்கிறார்கள்?

அந்த மௌனத்திற்குப் பின்னால் ரத்தமும் கண்ணீரும் கலந்த கதைகள் உண்டு. ஒருபுறம், கண்மூடித்தனமான குண்டுவீச்சுகள் குழந்தைகளின் மென்மையான தலைகளையும் நரம்பு மண்டலங்களையும் சிதைத்துப் போட்டுள்ளன. மறுபுறம், எங்கு பார்த்தாலும் சடலங்கள், சொந்தங்களின் மரணம், இடிந்து விழும் கூரைகள் எனத் தொடர்ந்து நிகழும் பேரதிர்ச்சிகள் அவர்களின் பேசும் ஆற்றலை முற்றிலுமாக விழுங்கிவிட்டன. காஸாவில் இரண்டு முறை மருத்துவராகத் தன்னார்வப் பணிகளைச் செய்திருக்கும் பிரெஞ்சு மருத்துவர் கேத்ரின் கிளாட்ஸ் புருபக், “இது வெறும் குறைபாடு இல்லை. குப்பைகளுக்கும் இடிபாடுகளுக்கும் இடையே புதைந்து கிடக்கும் "மௌனத் துயரம்" என்று கண்ணீருடன் விவரிக்கிறார். அவருடன் அல் ஜசீரா நடத்திய நேர்காணல், காஸா போரின் கோரமான பின்வளைவுகளை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. காஸாவின் ஹமாத் மருத்துவமனை வார்டுகளில் இன்று மழலை மொழிகளுக்குப் பதிலாக மூச்சுக் காற்று மட்டுமே கேட்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அந்தக் குழந்தைகள் ஹிஸ்டெரிகல் அஃபோனியா (Hysterical Aphonia) எனப்படும் தீவிரமான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அந்த மருத்துவமனையின் குரல்வள சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் மூசா அல் கோர்த்தி இதைப்பற்றிக் கூறும்போது ”குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல், அவர்களது குரல்வளையைப் பாதித்துள்ளது. இதனால் சிலர் பேசும் ஆற்றலை முற்றிலுமாக இழக்கும் சோகம் நேர்ந்துள்ளது” என்று கவலை தெரிவிக்கிறார்.

குழந்தைகளுக்கு என்ன ஆனது?

அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐந்து வயது சிறுவன் ஜாட், இதற்கு முன் எந்தக் குறைபாடும் இன்றிக் கலகலவெனப் பேசிக் கொண்டிருந்த குழந்தை. ஆனால் போரின் தாக்குதல் அவனைப் பாதித்திருப்பதால், இன்று விக்கித்து நிற்கிறான். அவனது உதடுகள் அசைகின்றன. ஆனால் அதிலிருந்து சொற்கள் வெளிவரவில்லை என்று கண்ணீர் வடிக்கிறார் அவனது தாயார். இதேபோல் அங்கு சிகிச்சை பெற்று வரும் நான்கு வயது லூசின் தம்பூராவின் கதை இன்னும் ரணமானது. வான்வழித் தாக்குதலில் அவள் வீட்டின் படிக்கட்டுகள் இடிந்து விழ, மூன்றாவது மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்டாள் அந்தச் சிறுமி. உடல் காயங்கள் மெல்ல ஆறினாலும், அவளது நாவிற்கு இன்னும் உயிர் வரவில்லை. ஒரு காலத்தில் பாடித் திரிந்த அந்தப் பறவை, இன்று கூண்டுக்குள் அடைபட்ட மௌனச் சிலையாகக் காட்சியளிக்கிறது. இந்தத் தற்காலிக மௌனம், நிரந்தரமான வளர்ச்சிக் குறைபாடாக மாறிவிடுமோ என்ற அச்சம் மருத்துவர்களை உலுக்குகிறது. இதைப்பற்றி மருத்துவர் புருபக் விவரிக்கையில், குழந்தைகள் பேசக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்கவில்லை. உளவியல் ரீதியாகவே அவர்களது உடல் தற்காப்புப் போரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதுமே மரணக் குழியாகத் தோற்றமளிக்கும்போது, குழந்தைகளின் நரம்பு மண்டலம் உறைந்து போயிருக்கிறது. நான் அசையாமல் இருந்தால், பேசாமல் இருந்தால், எமன் என்னை விட்டுவிடுவான் என்ற ஒரு மாயப் பாதுகாப்பு உணர்வுக்குள் அவர்கள் தங்களைச் சுருக்கிக் கொள்கிறார்கள். அந்தக் குழந்தைகள் விளையாடுவதை நிறுத்திவிட்டார்கள், சிரிப்பதை மறந்துவிட்டார்கள். இது அவர்களின் அறிவாற்றலை மெல்ல மெல்லக் கொன்று கொண்டிருப்பது ஒரு அமைதியான போர்க் காயம்” என்கிறார்.

காஸாவில் மட்டும் ஏன் இப்படி?

மருத்துவர் கேத்ரின் கிளாட்ஸ் புருபக் (Katrin Glatz Brubakk), காஸா பகுதிகளில் 12 ஆண்டுகளாகப் பணி ஆற்றிய அனுபவம் கொண்டவர். அவரது சொல்லும்போது, “காஸாவைப் போல ஒரு நரகத்தை நான் எங்கும் கண்டதில்லை. அங்கே பாதுகாப்பு என்ற சொல்லுக்கே அர்த்தம் இல்லை. குழந்தைகளின் மூளையில் உள்ள அச்சத்தின் மையமான 'அமிக்டலா' எப்போதும் அலறிக் கொண்டே இருக்கிறது. கற்றல் மற்றும் உணர்ச்சிகளைக் கையாளும் பகுதிகள் முற்றிலுமாகச் செயலற்றுப் போகின்றன” என்கிறார். “காஸாவில் எல்லா இடங்களிலும் குண்டுகள் விழுகின்றன, ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள், ஒவ்வொருவரும் ஆபத்தில் இருக்கிறார்கள். உடல்நலம் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் முழுமையான வீழ்ச்சி இந்தப் பிரச்சனையை இன்னும் மோசமாக்குகிறது. உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ உங்களுக்குத் தேவையான எந்த உதவியையும் உங்களால் பெற முடியாது, அங்கிருந்து தப்பிச் செல்லவும் முடியாது. உடல் உறுப்புகள் துண்டிக்கப்படுவதையோ அல்லது காயங்களுக்குக் கட்டப்பட்டிருக்கும் கட்டுக்களையோ காட்டிவிடுவது எளிது. ஆனால் அதிர்ச்சியால் பூட்டிக்கொண்ட குரலை எப்படிச் சரி செய்வது?” என்று கேட்கிறார்.

குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் என்ன?

இருண்ட இந்தப் பாதையில் சிறிய வெளிச்சமாகத் தெரிவது, சில மென்மையான சிகிச்சைகள் மட்டுமே. "நம்பிக்கை குமிழ்கள்" என்ற பெயரில் சோப்புக் குமிழ்களை ஊத வைத்து, குழந்தைகளின் நரம்புகளை அமைதிப்படுத்த மருத்துவர்கள் முயல்கின்றனர். மெதுவாகக் காற்றை வெளியேற்றி, அந்தக் குமிழ்கள் பறப்பதைப் பார்க்கும்போது, குழந்தைகளின் அச்சுறுத்தப்பட்ட மனம் தற்காலிகமாக அமைதி கொள்கிறது. ஆனால், மருந்துகளும் உபகரணங்களும் போரினால் அழிக்கப்பட்ட நிலையில், இந்தச் சிகிச்சையைத் தொடர்வது ஒரு பெரும் போராட்டமாகவே உள்ளது. காஸாவில் குழந்தைகளின் குரல் ஒலி மீண்டும் கேட்க வேண்டும் என்றால், குண்டுமழையின் கோர ஒலி அடங்க வேண்டும். அணுகுண்டுகள் விழுந்த தாக்கம் பல நூற்றாண்டுகளாக ஹிரோஷிமா நாகசாகியில் பிறந்த ஒவ்வொரு பிறப்பையும் பாதித்தது. நிகழ்கால உலகத்தைக் கண்ணீரால் கதற வைக்கும் போர்கள், எதிர்கால உலகத்தைப் பேச்சிழக்கச் செய்கிறது என்பதை மனித குலம் எப்போது உணரும்? குழந்தைகளின் இந்த அமைதியான அலறல், போர் அரசியலை விரும்புபவர்கள் செவிகளில் எப்படிக் கேட்கும்?

Summary

Gaza’s children are falling silent. Trauma from relentless war has left nearly 1.1 million kids mentally shattered, many unable to speak or smile anymore.

logo
Kizhakku News
kizhakkunews.in