
அமைதியை ஏற்படுத்தியதில் முக்கிய பங்காற்றியதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்துள்ளார்.
நேற்று (ஜூலை 7) இரவு அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தின்போது, நோபல் விருதுக் குழுவிற்கு அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தின் நகலை அதிபர் டிரம்பிடம் நெதன்யாகு வழங்கினார்.
நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நேற்று (ஜூலை 7) வெள்ளை மாளிகைக்கு வந்து அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் நெதன்யாகு, அங்கு நடைபெற்ற இரவு விருந்தில் பேசியதாவது,
`ஏற்கனவே சிறந்த வாய்ப்புகளை அதிபர் ஏற்படுத்தியுள்ளார். ஆபிரஹாம் ஒப்பந்தங்களை அவர் இறுதி செய்தார். நாம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு நாட்டில், ஒரு பிராந்தியத்தில் ஒன்றன் பின் ஒன்றாகப் அவர் அமைதியை ஏற்படுத்தி வருகிறார்.
எனவே, நான் நோபல் பரிசுக் குழுவிற்கு அனுப்பிய கடிதத்தை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். இது உங்களை அமைதிக்கான (நோபல்) பரிசுக்கு பரிந்துரைக்கும் கடிதமாகும். நீங்கள் மிகவும் தகுதியானவர், அதை நீங்கள் பெறவேண்டும்’ என்றார்.
மேலும், அமைதி மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்த டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளை நெதன்யாகு வெகுவாகப் பாராட்டினார். குறிப்பாக, மத்திய கிழக்கில், யூத மக்களுக்காக அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகளை தன் பேச்சில் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அத்துடன், `அதிபரிடம் ஒரு அசாதாரணமான குழு உள்ளது, மேலும் சவால்களை எதிர்கொள்ளவும், வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் எங்கள் அணிகள் ஒன்றாக இணைந்து ஒரு அசாதாரண கலவையை உருவாக்குகின்றன என நான் நினைக்கிறேன்’ என்று இஸ்ரேல் பிரதமர் பேசினார்.
தன்னை நோபல் பரிசுக்குப் பரிந்துரைத்த நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்து பேசிய டிரம்ப், `இது எனக்குத் தெரியாது. ஆஹா, மிக்க நன்றி. குறிப்பாக உங்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது’ என்றார்.
இதுவரை, முன்னாள் அமெரிக்க அதிபர்கள் தியோடர் ரூஸ்வெல்ட் (1906), வுட்ரோ வில்சன் (1919) மற்றும் பாரக் ஓபாமா (2009) ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.