கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக சஹாரா பாலைவனத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கு ஆஃப்ரிக்காவில் அமைந்துள்ள தென்கிழக்கு மொரோகோவில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் இந்த அரிய நிகழ்வு நடந்தேறியுள்ளது.
மொரோகோ தலைநகர் ரபாட் நகரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் சஹாரா பாலைவனத்தில் அமைந்துள்ள ஊரகப் பகுதியான டகோனைட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரே நாளில் சுமார் 100 மி.மீ. மழை டகோனைட்டில் மட்டும் பதிவாகியுள்ளது.
கோடைக்காலத்தின் இறுதி கட்டத்தில் இவ்வாறு சஹாரா பாலைவனப்பகுதியில் மழைபெய்வது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். அதிலும் இத்தகைய மழையால், 50 வருடங்களுக்குப் பிறகு அப்பகுதியில் உள்ள இரிகுய் ஏரி முதல்முறையாக நிரம்பி அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இந்த நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வாளர்கள், இதற்குக் காரணமாக காலநிலை மாற்றத்தைக் கைகாட்டுகின்றனர். அதிலும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள சஹாரா பாலைவனத்தில், சமீபகாலமாக அதிகரித்துள்ள அதிகப்படியான வெப்பத்தால் அந்நாட்டு வளிமண்டத்தில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.
இதனால் இத்தகைய ஈரப்பதம் சராசரியைக் காட்டிலும் அளவுக்கதிகமான மழையை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பாரா மழை அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த வெள்ளப் பாதிப்பால் சுமார் 18 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.