இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ ஆகியவை வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு இன்று (ஆகஸ்ட் 7) மீண்டும் விமான சேவைகளைத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூனில் தொடங்கி வங்கதேசத்தில் நடைபெற்று வந்த மக்கள் போராட்டம் ஆகஸ்ட் 5-ல் உச்சத்தை எட்டியது. போராட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கான மக்கள் கலவரத்தில் இறங்கி பொது சொத்துக்களைச் சேதப்படுத்தினார்கள். இதை அடுத்து தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார் ஷேக் ஹசீனா.
இதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் நிலவிய நிலையற்ற சூழல் காரணமாக இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் அந்நாட்டுத் தலைநகர் டாக்காவுக்கு வழங்கி வந்த விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்தன. இந்நிலையில் டாக்காவுக்கு மீண்டும் விமான சேவைகள் இன்று தொடங்கியுள்ளன.
மேலும் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம், டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து அத்தியாவசியமற்ற பணியாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 190 நபர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது. 20 முதல் 30 வரையிலான மூத்த அதிகாரிகள் தற்போது டாக்கா இந்திய தூதரகத்தில் உள்ளனர்.
வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இடைக்கால அரசு அமையவிருந்தாலும், தில்லி ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வங்கதேச தூதரகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதில் வங்கதேசத்தைச் சேர்ந்த 100 பணியாளர்கள் உள்ளனர்.