
கடந்த 477 நாட்களாக காஸாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 4 இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகளை இன்று விடுவித்தது ஹமாஸ்.
கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மேற்கொண்ட பல மாத பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காஸாவில் 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற வந்த போரை நிறுத்த இஸ்ரேலும், ஹமாஸும் ஒப்புக்கொண்டன. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரு தரப்பினர் கட்டுப்பாட்டில் இருந்த பிணையக் கைதிகளை விடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேல் பிடியிலிருந்த பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 200 பேர் முதற்கட்டமாக அண்மையில் விடுவிக்கப்பட்டனர். இதற்கு ஈடாக ஹமாஸ் பிடியிலிருந்த இஸ்ரேல் குடிமக்கள் மூன்று பேர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பிணையக் கைதிகளின் 2-ம் கட்ட பரிமாற்றமாக கடந்த 477 நாட்களாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த 4 இஸ்ரேலிய ராணுவ வீராங்கனைகள் இன்று விடுவிக்கப்பட்டனர். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் அவர்களை ஒப்படைப்பதற்கு முன்பு, காஸா நகரத்தின் சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அவர்கள் மேடையேற்றப்பட்டார்கள்.
ராணுவ உடையணிந்திருந்த அவர்கள் நால்வரின் கைகளிலும் ஹமாஸ் அமைப்பு அளித்திருந்தன பைகள் இருந்தன. கடந்த 7 அக்டோபர் 2023 அன்று இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நடத்திய தாக்குதலின்போது இவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள்.
மேலும், பிணையக் கைதிகளின் 2-ம் கட்ட பரிமாற்றமாக, பாலஸ்தீனத்தை சேர்ந்த 200 பேர் இன்று (ஜன.25) விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்தது ஹமாஸ். இதில், ஹமாஸ் மட்டுமல்லாமல் இஸ்லாமிக் ஜிஹாத் மற்றும் பாலஸ்தீன் விடுதலைக்கான பாப்புலர் முன்னணி ஆகிய அமைப்புகளைைச் சேர்ந்தவர்களும் அடக்கம் என்று கூறப்படுகிறது.
அத்துடன், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மத்திய காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தின் ஒரு தரப்பினர் வெளியேற உள்ளனர்.