இந்தியா-கனடா உறவில் ஏற்பட்ட விரிசலுக்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு: வெளியுறவு அமைச்சகம்

இந்தியா-கனடா உறவில் ஏற்பட்ட விரிசலுக்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு: வெளியுறவு அமைச்சகம்

இந்தியாவுக்கும், இந்திய அதிகாரிகளுக்கு எதிராகவும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக எந்த ஒரு ஆதாரத்தையும் இதுவரை கனடா அரசு எங்களிடம் வழங்கவில்லை.
Published on

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலை தொடர்பான எந்த ஒரு ஆதாரத்தையும் இந்திய அரசிடம் வழங்கவில்லை என கனடா பிரதமர் தெரிவித்ததை அடுத்து, இந்தியா-கனடா நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்ட விரிசலுக்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு என மத்திய வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமையால் காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் 2020-ல் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு ஜூன் மாதம் அந்நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருந்த ஒரு குருத்வாராவுக்கு வெளியே வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் நிஜார் கொல்லப்பட்டார்.

இது குறித்து கடந்த அக்.14-ல் கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த விவகாரத்தில் இந்திய அரசை பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும் இந்த விவகாரத்தில் கனடாவில் உள்ள இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் சந்தேக வளையத்தில் கனடா அரசால் கொண்டுவரப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கனடா பிரதமரின் குற்றச்சாட்டுகளை மறுத்த மத்திய வெளியுறவு அமைச்சகம், நிஜார் கொலை வழக்கு தொடர்பான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை இந்திய அரசிடம் கனடா அரசால் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தது. மேலும் கனடாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துக்கொள்வதாகவும் அறிவித்தது.

இதை அடுத்து நிஜார் கொலை வழக்கு தொடர்பாக அந்நாட்டு விசாரணைக் குழு முன்பு ஆஜராகி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கமளித்தார். ட்ரூடோ அளித்த விளக்கங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு:

`இத்தனை நாட்களாக தொடர்ந்து நாங்கள் எதைத் தெரிவித்து வருகிறோமோ அதைத்தான் இன்று நாங்கள் கேட்டோம். இந்தியாவுக்கும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எதிராகவும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக எந்த ஒரு ஆதாரத்தையும் இதுவரை கனடா அரசு எங்களிடம் வழங்கவில்லை..

இப்படிப்பட்ட ஒரு நடத்தையால் இந்தியா கனடா நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தியதற்கான முழு பொறுப்பும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மட்டுமே சேரும்’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in