தகவல்களைத் திருடி சீனாவில் நிறுவனம் அமைத்த கூகுள் முன்னாள் ஊழியர் கைது!

தகவல்களைத் திருடி சீனாவில் நிறுவனம் அமைத்த கூகுள் முன்னாள் ஊழியர் கைது!

தகவல்களைத் திருடியதாக கூகுள் நிறுவனத்தின் முன்னாள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பொறியாளராக இருந்த ஒரு சீன நாட்டவரை கைது செய்ததாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது.
Published on

சீனாவில் தனது சொந்த நிறுவனத்தை அமைப்பதற்காக நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களைத் திருடியதாக கூகுள் நிறுவனத்தின் முன்னாள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பொறியாளராக இருந்த ஒரு சீன நாட்டவரை கைது செய்ததாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது.

38 வயதான லியோன் டிங் அல்லது லின்வெய் டிங் புதன்கிழமை கைது செய்யப்பட்டு கலிபோர்னியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது நான்கு வர்த்தக ரகசியத் திருட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

வாஷிங்டனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான தொழில்நுட்பப் போட்டிக்கு மத்தியில் மேம்பட்ட அமெரிக்க தொழில்நுட்பங்களை சீனாவுக்கு சட்டவிரோதமாக மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் விழிப்புடன் இருக்கும் என்பதற்கான அடையாளமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது என்று தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தலைமை வழக்கறிஞர் மெரிக் கார்லண்ட், "நமது தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற மேம்பட்ட தொழில்நுட்பங்களின் திருட்டை நீதித்துறை பொறுத்துக்கொள்ளாது" என்று கூறினார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், டிங்கிற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டின்படி, டிங் 2019-ல் கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியமர்த்தப்பட்டார். கூகுளின் வாடிக்கையாளர்களுக்கான மெஷின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளின் செயல்பாட்டிற்கு உதவும் மென்பொருளை உருவாக்குவதிலும் அவர் பணியாற்றினார். டிங் மே 2022-ல் தனிப்பட்ட கூகுள் கிளவுட் கணக்கில் ரகசிய கூகுள் தகவல்களைப் பதிவேற்றத் தொடங்கியதாகவும், மே 2023க்குள் 500 க்கும் மேற்பட்ட கோப்புகளைப் பதிவேற்றியதாகவும் தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

கூகுளில் பணிபுரிந்தபோது, சீனாவைச் சேர்ந்த ஏஐ நிறுவனமான Beijing Rongshu Lianzhi Technology நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் அவர் பணியாற்றினார். கூகுளுக்குத் தெரிவிக்காமல் சீனாவில் Shanghai Zhisuan Technology என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ - கடந்த ஜனவரி 6 அன்று டிங்கின் இல்லத்தை சோதனையிட்டு அவரது மின்னணு சாதனங்கள் மற்றும் பிற ஆதாரங்களையும் கைப்பற்றியது.

கடந்த ஆண்டு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் சீனா போன்ற நாடுகளை விட அமெரிக்கா முன்னணியில் இருக்கவேண்டும் என்று கூறி அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

கூகுள் செய்தித் தொடர்பாளர் ஜோஸ் இந்த விவகாரம் பற்றி கூறியதாவது: "எங்கள் ரகசிய வணிகத் தகவல்கள் மற்றும் வர்த்தக ரகசியங்கள் திருடப்படுவதைத் தடுக்க எங்களிடம் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன. விசாரணைக்குப் பிறகு, இந்த ஊழியர் ஏராளமான ஆவணங்களைத் திருடியதை நாங்கள் கண்டறிந்தோம், நாங்கள் விரைவாக இந்த வழக்கை சட்ட அமலாக்கத்திற்கு அனுப்பினோம்" என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in