
சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்பாக தன்னால் வெளியிடப்பட்ட சில பதிவுகளுக்காக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, அரசு தொடர்பான செலவீனங்களைக் குறைப்பதற்கான ஆலோசனைகளை வழங்க புதிதாக அமைக்கப்பட்ட அரசு செயல்திறன் துறையின் தலைவராக எலான் மஸ்க் பணியாற்றினார்.
பதவிக்காலம் முடிந்து வெள்ளை மாளிகையிலிருந்து மஸ்க் வெளியேறியதைத் தொடர்ந்து, டிரம்புக்கும் அவருக்கும் இடையே மோதல் வெடித்தது.
அமெரிக்க அரசால் கொண்டு வரப்பட்ட மசோதாவை `மிகப்பெரிய அழகான மசோதா’ என்று குறிப்பிட்டதுடன், `மிகப்பெரிய கேவலமான மசோதா’ என்று அதை விமர்சித்து மஸ்க் பதிவிட்டதால் இருவருக்கும் இடையே பிரச்னை தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, மசோதாவின் அம்சங்கள் மஸ்கிற்கு தெரியும் என்றும் அவருக்கும் தனக்கும் இடையிலான உறவு இனி சிறப்பானதாக இருக்குமா என்பது தெரியவில்லை என்றும் கருத்து தெரிவித்தார் டிரம்ப். இதை திட்டவட்டமாக மறுத்த மஸ்க், தான் இல்லாவிட்டால் அதிபர் தேர்தலில் டிரம்பால் வெற்றிபெற்றிருக்க முடியாது என்றும், அவர் நன்றிகெட்டவர் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
அதன்பிறகு, மஸ்கின் நிறுவனங்களுடன் அமெரிக்க அரசு மேற்கொண்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக டிரம்ப் அவருக்கு எச்சரிக்கவே, நாசாவுக்கு உதவிவரும் ஸ்பேக் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் திட்டம் கைவிடப்படும் என்று மஸ்கும் பதில் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், தன் எக்ஸ் கணக்கில் வருத்தம் தெரிவித்து இன்று (ஜூன் 11) வெளியிட்ட பதிவில் எலான் மஸ்க் கூறியதாவது,
`அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பாக கடந்த வாரம் வெளியிடப்பட்ட என்னுடைய சில பதிவுகளுக்காக வருந்துகிறேன். அவை வெகுதூரம் சென்றுவிட்டன’ என்றார்.