
லண்டன் வொய்ட்சாப்பல் ரயில் நிலையத்தில் இருந்த ஆங்கிலம்-வங்காள மொழி பெயர்ப் பலகையின் புகைப்படத்தை தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்ட அந்நாட்டு எம்.பி. ரூபர்ட் லோவ், `இது லண்டன், ரயில் நிலையத்தின் பெயர் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
எம்.பி. ரூபர்ட் லோவின் பதிவில் `ஆம்’ என்று பதிலளித்து, அவருக்கு ஆதரவு தெரிவித்தார் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும், பிரபல அமெரிக்கத் தொழிலதிபருமான எலான் மஸ்க்.
வொய்ட்சாப்பல் ரயில் நிலையத்தில் வங்காள மொழியில் பெயர்ப் பலகையில் வைத்திருப்பதற்கு அப்பகுதியில் வசிக்கும் வங்காளிகளே காரணம். 19-ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வொய்ட்சாப்பல் பகுதியில் ஏராளமான யூதர்கள் வசித்து வந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அப்பகுதியில் அதிகளவில் வங்காளிகள் குடியேறினார்கள்.
வொய்ட்சாப்பல் மட்டுமல்லாமல், லண்டனின் பல்வேறு ரயில் நிலையங்களிலும் இதுபோல இரட்டை மொழி பெயர்ப் பலகைகள் உண்டு. அந்தந்த பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையின குடியேறிகளின் வரலாற்றை அங்கீகரிக்கும் வகையில், இத்தகைய பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, லண்டன் சௌத்ஆல் ரயில் நிலையத்தில் ஆங்கிலம்-குர்முகி பெயர்ப் பலகை உள்ளது. 1947-ல் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு ஏற்பட்ட பிரிவினைக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான பஞ்சாபிகள் இங்கிலாந்திற்குச் சென்று, மேற்கு லண்டனின் சௌத்ஆல் பகுதியில் குடியேறினார்கள்.
சீக்கிய கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் இப்பகுதியில் பல குருதுவாராக்கள் உள்ளன. மேலும் அப்பகுதி மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பஞ்சாபிகள் என்று கூறப்படுகிறது. இதனாலேயே `குட்டி பஞ்சாப்’ என சௌத்ஆல் வேடிக்கையாகக் குறிப்பிடப்படுகிறது.
2007-ல் குர்முகியில் உள்ள பெயர்ப் பலகையை அகற்றக்கோரி சில அமைப்புகள் கோரிக்கை வைத்தன. ஆனால் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பெயர்ப் பலகையை தக்க வைக்க முடிவெடுக்கப்பட்டது. அத்துடன், ஜப்பானிய மற்றும் லத்தின் மொழிகளில் அமைந்த பெயர்ப் பலகைகளைக் கொண்ட ரயில் நிலையங்கள் கூட லண்டனில் உள்ளன.