
டெஸ்லா நிறுவனரும் பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், அமெரிக்கக் கட்சி எனும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி மசோதாவில் கையெழுத்திட்ட நிலையில் எலான் மஸ்க் இக்கட்சியைத் தொடங்கியுள்ளதாக சனிக்கிழமை அறிவித்தார்.
உலகின் பணக்காரரான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருக்கமான நம்பிக்கைக்குரியவராகவே இருந்தார். 2024 அதிபர் தேர்தலில் டிரம்ப் கட்சிக்கு அதிக நன்கொடை கொடுத்தது எலான் மஸ்க் தான்.
அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, அரசு தொடர்புடைய செலவினங்களைக் குறைப்பதற்கான ஆலோசனைகளை வழங்க புதிதாத அமைக்கப்பட்ட அரசு செயல்திறன் துறையின் தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். இதன் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எலான் மஸ்க் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்.
இதன்பிறகு, வரி குறைப்பு மசோதா தொடர்பாக டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மோதல் வெடித்தது. வரி மசோதா தொடர்பாக டிரம்புக்கு எதிரான கருத்துகளை எலான் மஸ்க் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளிப்படையாக பதிவிட்டு வந்தார். டொனால்ட் டிரம்பும் எலான் மஸ்கிடம் பேச தயாராக இல்லை எனக் கூறினார். எனினும், அதிபர் டிரம்ப் குறித்த சில பதிவுகளுக்காக வருத்தம் தெரிவிப்பதாக எலான் மஸ்க் கூறினார்.
கடந்த ஜூலை 4 அன்று சுதந்திர நாள் கொண்டாட்டத்தில், "இரு கட்சி முறையிலிருந்து சுதந்திரம் பெற விரும்புகிறீர்களா? அமெரிக்கக் கட்சி எனும் கட்சியைத் தொடங்க வேண்டுமா?" என்று கேள்வியை எக்ஸ் தளத்தில் முன்வைத்திருந்தார் எலான் மஸ்க். இதற்கு ஆம் என65.4% பேர் வாக்களித்தார்கள்.
வரி குறைப்பு மசோதா தான் எலான் மஸ்குக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது. இந்த மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட நிலையில், புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்கக் கட்சி என்று கட்சிக்குப் பெயர் சூட்டியுள்ளார்.
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி, குடியரசு கட்சி என இரு கட்சி முறையே இருக்கிறது.
"உங்களுக்குப் புதிய அரசியல் கட்சி தேவை. நாட்டை திவாலாக்குவதில் நாம் ஒரு கட்சி அமைப்பில் தான் வாழ்கிறோம். ஜனநாயகத்தில் இல்லை. உங்களுடைய சுதந்திரத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக அமெரிக்கக் கட்சி இன்று உருவாக்கப்பட்டுள்ளது" என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.