இந்தியாவை ஒப்பிட்டு அமெரிக்க வாக்கு எண்ணிக்கையை விமர்சித்த எலான் மஸ்க்!

அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் 49 மாகாணங்களில் எண்ணப்பட்டுவிட்டாலும், கலிஃபோர்னியாவில் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தியாவை ஒப்பிட்டு அமெரிக்க வாக்கு எண்ணிக்கையை விமர்சித்த எலான் மஸ்க்!
1 min read

19 நாட்களைக் கடந்தும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெறாததை விமர்சித்துள்ள அந்நாட்டுத் தொழிலதிபர் எலான் மஸ்க், இந்தியாவில் பின்பற்றப்படும் வாக்கு எண்ணிக்கை முறையைப் புகழ்ந்துள்ளார்.

இந்தியாவில் சுமார் 90 கோடி பொதுமக்கள் வாக்குரிமை பெற்றிருந்த நிலையில், கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார் 64.2 கோடி வாக்குகள் பதிவாகியிருந்தன. தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை ஜூன் 4 அன்று காலை 8 மணி அளவில் தொடங்கி, அன்றே முடிவுகள் வெளியாகின.

வாக்குப்பதிவுக்காக இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் வாக்கு எண்ணும் பணி விரைவாக நடைபெறுகிறது. ஆனால் அமெரிக்க தேர்தல்களில் இன்னமும் வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற பல நாட்கள் எடுத்துக்கொள்கிறது.

உதாரணமாக, கடந்த நவ.5-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவுபெற்றதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் 49 மாகாணங்களில் எண்ணப்பட்டுவிட்டாலும், கலிஃபோர்னியா மாகாணத்தில் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கலிஃபோர்னியாவில் பெரும்பாலும் தபால் வழியாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச் சீட்டு உறைகளில் உள்ள கையெழுத்துகளை சரிபார்ப்பது, வாக்குச் சீட்டுகளை பகுதிவாரியாக பிரிப்பது என வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு பல நடைமுறைகள் பின்பற்றப்படுவதால், அங்கே வாக்கு எண்ணிக்கை 19 நாட்களை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் விமர்சித்து பதிவிட்டுள்ள எலான் மஸ்க் `ஒரே நாளில் 64 கோடி வாக்குகள் இந்தியாவில் எண்ணப்பட்டுள்ளன, ஆனால் கனிஃபோர்னியாவில் இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in