அரசியல் காரணங்களால் விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ்: எலான் மஸ்க்

முக்கிய ஊடகங்களில் உள்ள நேர்மையின்மை பற்றி புகார் செய்யும் ஒருவரிடமிருந்து வெளிவந்துள்ள பொய்
அரசியல் காரணங்களால் விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ்: எலான் மஸ்க்
ANI
1 min read

அரசியல் காரணங்களுக்காக விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளதாக எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.

அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் கடந்தாண்டு ஜூன் 5 அன்று 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றார்கள். அவர்கள் பயணம் மேற்கொண்ட ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார்கள்.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்துவரும் பணியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கிடம் ஒப்படைத்துள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

அண்மையில் அதிபர் டிரம்பும், தொழிலதிபர் மஸ்கும் கூட்டாக இணைந்து முதல்முறையாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்கள். இந்தப் பேட்டியின் நெறியாளர் சீன் ஹானிட்டி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள இரு விண்வெளி வீரர்களை மீட்பது குறித்து எலான் மஸ்கிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மஸ்க், `அரசியல் காரணங்களுக்காக அவர்கள் (சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர்) அங்கேயே (விண்வெளி நிலையத்தில்) உள்ளார்கள்’ என்று தெரிவித்தார்.

எலான் மஸ்கின் இந்த பதிலை விமர்சித்து தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐரோப்பிய விண்வெளி வீரர் ஆன்டி மோகென்சன், `முக்கிய ஊடகங்களில் உள்ள நேர்மையின்மை பற்றி புகார் செய்யும் ஒருவரிடமிருந்து வெளிவந்துள்ள பொய்’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in