
தனக்கும், தொழிலதிபர் எலான் மஸ்குக்கும் இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கப் பலரும் முயற்சி செய்வதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது மனம் திறந்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் களமிறங்கியதும், அவருக்கு ஆதரவு தெரிவித்து, பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேர்தல் நிதி வழங்கினார் பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்.
தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராக கடந்த ஜன.20-ல் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், `அரசு செயல்திறன் துறை’ என்கிற ஒரு புதிய துறையை உருவாக்கி அதன் தலைவராக எலான் மஸ்கை நியமித்தார். இந்நிலையில், டிரம்பும், மஸ்கும் கூட்டாக இணைந்து முதல்முறையாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அண்மையில் பேட்டி அளித்தார்கள்.
அந்தப் பேட்டியில், தங்கள் செயல்பாடுகள் குறித்த எதிர்க்கட்சிகள் விமர்சனம், தேர்தல் சமயத்தில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, தங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியுள்ளார்கள்.
டிரம்ப்-மஸ்க் இடையே கருத்து மோதலை உருவாக்கி பிரிவினையை ஏற்படுத்த நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், இரவு நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவை முயற்சி செய்வது குறித்து இந்தப் பேட்டியின்போது, தொகுப்பாளர் சீன் ஹானிட்டி அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், `உண்மையில், என்னை தொலைபேசியில் அழைத்து, நம்மைப் பிரிக்க முயற்சி நடைபெறுகிறது என்றார் மஸ்க். அதற்கு, நிச்சயமாக என்று நான் பதிலளித்தேன். இது மிகவும் தவறான செயலாகும். இந்த வித்தையில் அவர்கள் தேர்ந்தவர்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் அதுதான் இல்லை.
ஏனென்றால், இதில் அவர்கள் தேர்ந்தவர்களாக இருந்திருந்தால், என்னால் அதிபராகியிருக்க முடியாது. இதன் மூலம் நான் என்ன தெரிந்துகொண்டேன் தெரியுமா? நமக்கு நடப்பதை அவர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்றார்.