
மியான்மர் நாட்டில் இன்று காலை 7.7 ரிக்டர் மற்றும் 6.4 அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி காலையில் 11.50 மணி அளவிலும் மதியம் 12 மணி அளவிலும் நிலநடுக்கம் மியான்மரில் உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மியான்மரின் மோனிவா நகருக்கு கிழக்கே நாட்டின் மத்தியப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மியான்மரில் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. இடிபாடுகளுக்கு இடையில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மியான்மரை ஒட்டியுள்ள தாய்லாந்து, மலேசியா, இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் உணரப்பட்டது.
தாய்லாந்தின் வடக்குப் பகுதி வரை நிலநடுக்கம் உணரப்பட்டது, பாங்காக்கில் மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன், பாங்காங்கில் 'அவசரநிலை'யை அறிவித்துள்ளார். பாங்காக் மற்றும் சில நகரங்களில் கட்டடங்கள் குலுங்குவதையும், மக்கள் பீதியில் ஓடுவதையும் எக்ஸ் தளத்தின் காணொளிகளின் வழியாகக் காணமுடிகிறது. 1 கோடியே 70 லட்சம் பேர் வாழும் பாங்காங்கில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து மக்கள் அனைவரும் கீழே இறங்கி வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தார்கள்.
சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொல்கத்தா மற்றும் மணிப்பூரின் சில பகுதிகளிலும், வங்காளதேசத்தின் டாக்கா மற்றும் சட்டோகிராமிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நாடுகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் எனப் பிரத்மர் மோடி கூறியுள்ளார். தாய்லாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பிரதமரின் அடுத்த வார தாய்லாந்துப் பயணம் ரத்தாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை மியான்மரில் 20 பேர், தாய்லாந்தில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள்.