

ஈரான் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில் துபாய் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், குறைவான அளவு விமானங்கள் மட்டுமே செயல்படுகின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக பல வளைகுடா நாடுகள் தங்கள் வான்வெளிகளை மூடின. மூன்று நாள்களுக்குப் பிறகு நேற்று (மார்ச் 2) துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து தொடங்கியது.
விமான சேவையைத் தொடங்கிய துபாய்
முன்னதாக நேற்று மாலை முதல் விமானங்கள் இயக்கப்படும் என்று அந்நாட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவித்திருந்தது. அப்போது ஏற்கெனவே முன்பதிவு செய்து காத்திருக்கும் பயணிகளுக்காக மட்டும் விமானங்கள் இயக்கப்படவுள்ளன. சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு இரிய முறையில் தகவல் தெரிவிக்கப்படும். அதுவரை பயணிகள் யாரும் விமான நிலையங்களுக்கு வருகை தர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மொத்தம் 20 விமானங்களே இயக்கம்
இதையடுத்து துபாய் விமான நிலையத்தில் இருந்து ஃப்லை துபாய், எமிட்ரேட்ஸ் விமானங்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டுள்ளன. உலகின் மிகவும் பரபரப்பான விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக உள்ள துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய நிலவரப்படி வெறும் 20 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன. இதனால் துபாய் விமான நிலையத்துக்கு தினந்தோறும் ரூ.2,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
திருப்பி அனுப்பப்படும் விமானங்கள்
மார்ச் 2 நிலவரப்படி துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் வெறும் 20 விமான இயக்கங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதில் 16 புறப்படுதல்கள் மற்றும் 4 இறங்குதல்கள் அடங்கும். இது வழக்கமான நிலையுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரிய சரிவாகும். நாளொன்றுக்கு சராசரியாக 1,200 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.ஈரான் - இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து, இன்னும் வளைகுடா நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பா, ஆசியா மற்றும் இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன. பயணிகளுக்கு பெரும் குழப்பமும், பயணத் தடைகளும் ஏற்பட்டுள்ளன.
இந்திய விமான சேவை பாதிப்பு
குறிப்பாக இந்திய வழித்தடங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, தில்லி, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து துபாய்க்கு வரும் எமிரேட்ஸ் விமானங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. நேற்று மும்பையிலிருந்து வந்த விமானம் துபாயில் தரையிறங்கிய நிலையில், ஹைதராபாத்தில் இருந்து பறந்த விமானம், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து பல்வேறு உலக நாடுகளுக்குப் பயணிக்க, முக்கியமான மாற்று விமான வழித்தடமாக உள்ள துபாய் விமான நிலையத்தில் பல்வேறு விமானங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதால், பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
While Dubai International Airport has reopened amid Iran war tensions, only a limited number of flights are being operated reducing up to 20 from 1,200 flights per day.