
பாலஸ்தீனத்தின் காஸா நகரத்தின் மீது நேற்று (ஆக. 10) இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்து அல் ஜஸீரா பத்திரிகையாளர்களில் ஒருவரான அனஸ் அல்-ஷெரிப், `முற்றுகைக்கு உள்ளான காஸாவையும் பாலஸ்தீன மக்களையும் உலகம் கைவிடக்கூடாது’ என்று வலியுறுத்தும் ஒரு உணர்ச்சிபூர்வமான செய்தியை விட்டுச் சென்றுள்ளார்.
`இதுவே எனது விருப்பமும் எனது இறுதி செய்தியும் ஆகும். இந்த வார்த்தைகள் உங்களைச் சென்றடைந்தால், இஸ்ரேல் என்னைக் கொன்று என் குரலை அடக்குவதில் வெற்றி பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்...’ என்று அனஸ் அல்-ஷெரிப்பின் மரணத்திற்குப் பிறகு அவரது எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்ட பதிவில் கூறப்பட்டுள்ளது.
தனது இறுதி வேண்டுகோளில், பாலஸ்தீனத்தின் அப்பாவி குழந்தைகளுடன் துணைநிற்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார், மேலும் `(பாலஸ்தீன) நிலத்தையும், அதன் மக்களையும் விடுவிப்பதற்கான பாலமாக இருக்கவேண்டும்’ என்று உலகெங்கிலும் இருக்கும் மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
`இஸ்லாமிய உலகத்தின் மணிமகுடத்தில் ரத்தினமாகவும், இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு சுதந்திர மனிதனின் இதயத் துடிப்பாகவும் இருக்கும் பாலஸ்தீனத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதன் மக்களையும், கனவு காணவோ அல்லது பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழவோ நேரமில்லாத அதன் அநீதி இழைக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்’ என்று அவர் எழுதியுள்ளார்.
`காசாவை மறந்துவிடாதீர்கள், உங்கள் உண்மையான பிரார்த்தனைகளில் என்னை மறந்துவிடாதீர்கள்’ என்று கூறி தனது செய்தியை அனஸ் நிறைவுசெய்திருந்தார்.
கடந்த ஏப்ரல் 6-ம் தேதி எழுதப்பட்ட இந்த செய்தியை தனது மரணத்திற்குப் பிறகு வெளியிடுமாறு அனஸ் கூறியதாக இந்த எக்ஸ் பதிவின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.
நேற்று (ஆக. 10) நடைபெற்ற தாக்குதலில் அனஸ் அல்-ஷெரீப், முகமது குரைகுயா, இப்ராஹிம் தாஹிர், மௌமின் அலய்வா மற்றும் முகமது நௌஃபல் ஆகிய ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
காசா ஊடக அலுவலகத்தின்படி, அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை காஸாவில் தொடங்கியதில் இருந்து குறைந்தது 237 பத்திரிகையாளர்கள் அங்கே கொல்லப்பட்டுள்ளனர்.