
அமைதிக்கான நோபல் பரிசை எனக்குத்தான் தர வேண்டும் என்று நான் சொல்லவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் ஏழுக்கும் மேற்பட்ட போர்களைத் தீர்த்து வைத்துள்ளதாகவும், அதனால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்தார்.
இந்தியா - பாகிஸ்தான், தாய்லாந்து - கம்போடியா, அர்மேனியா - அஜர்பைஜான், கோசோவோ - செர்பியா, இஸ்ரேல் - ஈரான், எகிப்து - எத்தியோபியா, ருவாண்டா - காங்கோ ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர்களை நிறுத்தியதாக காரணத்திற்காக நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 2025 ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, நேற்று (அக்.10) வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடாவுக்கு அறிவிக்கப்பட்டது. வெனிசுலா மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அயராது உழைத்த காரணத்தால் அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. டிரம்ப் பலமுறை கோரிக்கை வைத்தும் அவருக்கு நோபல் பரிசு கிடைக்காதது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், பரிசு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை, “அதிபர் டிரம்ப் தொடர்ந்து அமைதிக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வார், போர்களை நிறுத்துவார். அமைதியைவிட அரசியல் நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதை நோபல் குழு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது” என்று கூறியிருந்தது.
இந்நிலையில் நோபல் பரிசு கிடைக்காதது குறித்து அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
“நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சோடா என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். உங்கள் சார்பாக நான் அதைப் பெற்றுக் கொள்கிறேன். நீங்கள் அதற்குத் தகுதி வாய்ந்தவர்தான் என்று கூறினார். நான் எனக்குத்தான் தர வேண்டும் என்று சொல்லவில்லையே என்று கூறினேன். அவரது பயணத்தில் நான் பலமுறை உதவியிருக்கிறேன். வெனிசுலாவில் பேரிடர்கள் ஏற்பட்டபோது அவர்களுக்கு உதவிகள் தேவைப்பட்டன. லட்சக் கணக்கான உயிர்களை நான் காக்க உதவியிருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே” என்றார்.