
முன்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு விதிக்கப்பட்ட 50 நாள் காலக்கெடுவை தற்போது குறைத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள விளாதிமிர் புதினுக்கு 10 அல்லது 12 நாள்கள் மட்டுமே உள்ளன இல்லையென்றால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று கூறினார்.
உக்ரைனுடனான போரை நீட்டித்ததற்காக புதின் மீதான தனது விரக்தியை வெளிப்படுத்திய டிரம்ப், `என்ன நடக்கப்போகிறது என்பது ஏற்கனவே தனக்குத் தெரியும் என்பதால், நீண்ட காலம் காத்திருப்பதில் அர்த்தமில்லை’ என்று கூறியுள்ளார்.
ஸ்காட்லாந்தில் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இணைந்து நேற்று (ஜூலை 28) செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், `அதிபர் புதினால் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் அவருக்கு வழங்கிய 50 நாள்களை குறைந்த எண்ணிக்கையில் குறைக்கப்போகிறேன், ஏனென்றால் என்ன நடக்கப்போகிறது என்பதற்கான பதில் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைக்கிறேன்’ என்றார்.
ரஷ்யாவிற்கு எதிரான இரண்டாம் கட்ட வரிகள் குறித்த தனது எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்திய டிரம்ப், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (ஜூலை 29) வெளியிடக்கூடும் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், தற்போதைய நிலவரம் குறித்து புதினுடன் இனி பேசுவதில் தனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் கூறினார்.
முன்னதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு, `அடுத்த 50 நாள்களில் ஒரு (போர் நிறுத்த) ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது மிகக் கடுமையான வரிகள் விதிக்கப்படும்’ என்று டிரம்ப் அச்சுறுத்தினார்.
உக்ரைனுடனான போரை புதின் கையாண்டுவரும் விதம் குறித்து டிரம்ப் அவ்வப்போது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். போர் நிறுத்தத்தை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தபோதிலும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.