
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடி சரியான முடிவை எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
கடந்த ஜன.20-ல் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப். அதிபர் பதவியேற்ற பிறகு முதல்முறையாக நேற்று (ஜன.27) இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் அவர் உரையாடினார். இதனை அடுத்து புளோரிடாவில் இருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் கிளம்பிய டிரம்ப், விமானத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,
`இன்று (ஜன.27) காலை பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் பேசினேன். அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் அவர் வெள்ளை மாளிகைக்கு வருகை தருவார். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது’ என்றார். மேலும், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்தியர்கள் தொடர்பாகவும் பிரதமர் மோடியுடன் பேசியதாகவும் குறிப்பிட்டார் டிரம்ப்.
`சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை திரும்ப அழைத்துக்கொள்வதில், அவர் (மோடி) சரியானதைச் செய்வார்’ என்று கூறிப்பிட்டார் டிரம்ப். இதற்கிடையே டிரம்ப்-மோடி தொலைபேசி உரையாடல் தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
`இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பயனுள்ள ஒரு தொலைபேசி உரையாடலை மேற்கொண்டார் அதிபர் டொனால்ட் டிரம்ப். இரு தலைவர்களும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது மற்றும் ஆழப்படுத்துவது குறித்து விவாதித்தனர். இந்தோ-பசிஃபிக், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் ஆகியவற்றின் பாதுகாப்பு உட்பட பிராந்தியத்தின் பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு வலிமையையும், ராஜ்ஜியரீதியிலான உறவுகளையும் உணர்த்தும் வகையில், பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு வருகை தருவதற்கான திட்டங்கள் குறித்து இரு தலைவர்கள் விவாதித்தனர்’ என்று குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.