என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது: டிரம்ப் ஆதங்கம்

தானும், மார்கோ ரூபியோவும் இணைந்து ருவாண்டாவிற்கும் காங்கோவிற்கும் இடையேயான போரை நிறுத்தும் ஓர் அற்புதமான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாக அறிவித்தார்.
என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது: டிரம்ப் ஆதங்கம்
ANI
1 min read

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியிருந்த போதிலும், மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அவர் பேசியுள்ளார்.

2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் முறையாக டொனால்ட் டிரம்பின் பெயரை பரிந்துரைத்துள்ள நிலையில், ட்ரூத் சோஷியல் சமூக வலைதளக் கணக்கில் தன்னுடைய ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

`இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.. நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது’ என்று பதிவிட்டு, தான் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முக்கிய போர் நிறுத்த/அமைதிப் பேச்சுவார்த்தைகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

ட்ரூத் சோஷியல் சமூக வலைதளக் கணக்கில் நீண்ட பதிவை வெளியிட்டுள்ள டிரம்ப், தானும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் இணைந்து ருவாண்டாவிற்கும் காங்கோவிற்கும் இடையேயான வன்முறை நிறைந்த ரத்தக்களறியான போரை நிறுத்தும் ஓர் அற்புதமான ஒப்பந்தத்தை இறுதி செய்ததாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் கத்தார் மேற்கொண்ட மத்தியஸ்தத்தை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயருவதற்குக் காரணமாக பல தசாப்தங்களாக நீடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர, ருவாண்டாவும், காங்கோவும் ஒப்புக்கொண்டுள்ளன.

`செர்பியாவிற்கும், கொசோவோவிற்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது... எகிப்திற்கும், எத்தியோப்பியாவிற்கும் இடையில் அமைதியைப் பேணியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது’ என்றும் தன் பதிவில் டிரம்ப் கூறினார்.

மேலும், `இல்லை, நான் என்ன செய்தாலும், ரஷ்யா/உக்ரைன், இஸ்ரேல்/ஈரான் உள்பட, விளைவுகள் என்னவாக இருந்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. ஏனென்றால் அவர்கள் அதை முற்போக்குவாதிகளுக்கு மட்டுமே வழங்குகிறார்கள்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in