
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்தல் பரப்புரையில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பென்னிசில்வேனியாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார். அப்போது திடீரென டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் டிரம்பின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாவலர்களின் உதவியுடன் அப்பகுதியிலிருந்து வெளியேறினார் டிரம்ப். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர், துப்பாக்கிச் சூட்டில் பலியானார். இதன்பிறகு, துப்பாக்கியால் சுட்ட நபரைச் சுட்டுக் கொன்றது சிறப்புப் பாதுகாப்புப் படை.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டிரம்ப், உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் நிலைமை சரியில்லை என்பதைப் புரிந்துகொண்டு விட்டேன் என்று இச்சம்பவம் குறித்துக் கூறியுள்ளார் டிரம்ப்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது விரைவாகச் செயல்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் படையினருக்கு நன்றி என்று டிரம்பின் மகள் இவானா, எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
டிரம்ப் மீது நடததப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி போன்ற பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
டிரம்ப் மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது. அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை என்று பிரதமர் மோடி, தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.