
ரஷ்யா மற்றும் அதனுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது இரண்டாம் கட்ட பொருளாதாரத் தடைகளை விதிக்க உடனடியாகப் பரிசீலிக்கவில்லை என்று இந்தியாவிற்கு சாதகமளிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இருப்பினும், 2-3 வாரங்களில் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தினார்.
உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், ரஷ்யா குறித்த தனது நிலைப்பாட்டை டிரம்ப் மாற்றியுள்ளார். குறிப்பாக, அலாஸ்கா உச்சிமாநாடு நன்றாக நடந்தது என்று கூறி, அதை `10/10’ என்று அவர் மதிப்பிட்டார்.
`இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அல்லது வேறு எப்போதாவது அதைப் பற்றி (பொருளாதாரத் தடைகள்) நான் யோசிக்கவேண்டியிருக்கலாம், ஆனால் உடனடியாக அது குறித்து நாம் யோசிக்கத் தேவையில்லை, இப்போது நான் இரண்டாம் கட்டத் தடைகளை விதித்தால், அது அவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்’ என்றார்.
சில நாள்களுக்கு முன்பு ரஷ்யாவிற்கு எதிராக ஆக்ரோஷமான தொனியில் கருத்துகளை வெளிப்படுத்திய அமெரிக்க அதிபரின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம், இந்த பேட்டியில் வெளிப்பட்டது. அதேநேரம் இந்த விவகாரத்தில் மேற்கொள்ளவுள்ள தனது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அவர் எதையும் பேட்டியின்போது விவரிக்கவில்லை.
இந்தியா மீது 25% பரஸ்பர வரியை விதித்த பிறகு, ரஷ்யாவின் கச்சா எண்ணெயைத் தொடர்ந்து வாங்குவதற்காக இந்திய இறக்குமதிகள் மீது கூடுதலாக 25% வரியை விதிப்பதாக அறிவித்து இந்திய அரசை டிரம்ப் திணறடித்தார். இதன் மூலம் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீதான ஒட்டுமொத்த வரி 50% ஆக உயர்ந்தது.
இரண்டாம் கட்ட பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என்று கூறி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகளை அவர் எச்சரித்தார். சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவிடம் இருந்து அதிகமாக கச்சா எண்ணெயை வாங்கும் முதல் இரு நாடுகளாகும்.