
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இரு புத்திசாலித் தலைவர்கள், அணு ஆயுதப் போராக மாறக்கூடிய ஒரு போரை தொடரவேண்டாம் என்று முடிவெடுத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை நிறுத்தியதற்காக முதல்முறையாக அவர் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளவில்லை.
வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீருக்கு நேற்று (ஜூன் 18) அளித்த மதிய விருந்திற்குப் பிறகு, ஓவல் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசியபோது இத்தகைய கருத்தை டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், ராணுவத் தளபதி முனீரைச் சந்தித்ததில் "பெருமை" அடைந்ததாக இந்த செய்தியாளர் சந்திப்பின்போது டிரம்ப் கூறினார்.
முனீருடனான சந்திப்பில் ஈரான் குறித்து விவாதிக்கப்பட்டதா என்று செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம் கேட்டதற்கு,
`பெரும்பாலானோரைவிட அவர்களுக்கு ஈரானை நன்றாகத் தெரியும், எதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. அந்த இருவரையும் அவர்கள் அறிவார்கள், அநேகமாக அவர்களுக்கு ஈரானை நன்றாகத் தெரிந்திருக்கலாம், ஆனால் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் பார்க்கிறார்கள், அவர் என்னுடன் உடன்பட்டார்’ என்றார்.
மேலும், `போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக நான் அவருக்கு (முனீர்) நன்றி சொல்ல விரும்புகிறேன். அதுவே அவர் இங்கே இருப்பதற்கான காரணம். உங்களுக்குத் தெரியும், பிரதமர் மோடி சிறிது காலத்திற்கு முன்பு இங்கே வந்திருந்தார், ஒரு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நாங்கள் இந்தியாவுடன் பணியாற்றி வருகிறோம். பாகிஸ்தானுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நாங்கள் பணியாற்றி வருகிறோம்’ என்றார் டிரம்ப்.
இந்தியா பாகிஸ்தான் மோதல் நிறுத்தம் குறித்துப் பேசிய டிரம்ப், `இரண்டு அதி புத்திசாலி மனிதர்கள் அந்த போரைத் தொடரவேண்டாம் என்று முடிவு செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அது ஒரு அணுசக்திப் போராக மாறியிருக்கலாம். அவர்கள் அதை முடிவு செய்தனர்’ என்றார்.