

இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடந்த போரை நான் தடுக்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் பிரதமர் உயிருடன் இருந்திருக்க மாட்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, கடந்த ஆண்டு மே 7 அன்று இந்திய படைகள் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்ட இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனை இந்திய பாதுகாப்புப் படை வெற்றிகரமாக முறியடித்தது. தொடர்ந்து 3 நாள்கள் தாக்குதல்கள் நடந்த நிலையில், மே 10 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது.
போரை நிறுத்தியது நான்தான்
இதற்கிடையில், பிரதமர் மோடியுடனும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபுடனும் பேசி, போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதி, இந்திய பாதுகாப்புப் படையினருடன் தொடர்பு கொண்டு பேசிய பிறகே, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரைத் தான் நிறுத்தியதாக இதுவரை 80 முறை அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாக். பிரதமர் உயிருடன் இருந்திருக்க மாட்டார்
இந்நிலையில், இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: “நான் ஆட்சிக்கு வந்த முதல் 10 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியிருக்கிறேன். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்த போர் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும். பாகிஸ்தானில் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் என்னிடம் சொன்னார். நான் தலையிடாமல் இருந்திருந்தால் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உயிருடனே இருந்திருக்க மாட்டார். அதேபோல் இஸ்ரேல் - ஹமாஸ், இஸ்ரேல் - ஈரான், எகிப்து - எத்தியோப்பியா, செர்பியா - கொசோவா, ருவாண்டா - காங்கோ ஜனநாயகக் குடியரசு, ஆர்மேனியா அஜர்பைஜான், கம்போடியா - தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் நடந்த போர்களையும் நான் நிறுத்தி வைத்துள்ளேன்.
9-வது போர் நிறுத்த முயற்சி
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் ஆரம்பித்தபோது நான் மட்டும் அதிபராக இருந்திருந்தால், இவ்வளவு படுகொலைகள் நடந்திருக்காது. 8 போர்களை நிறுத்திய நான், ஒன்பதாவதாக ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த முயன்று கொண்டிருக்கிறேன். ஈரான் தனது அணுசக்தி மற்றும் ஏவுகணை திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மீண்டும் தொடங்கியுள்ளது. மீண்டும் அதன் தீய லட்சியங்களைத் தொடர்கிறது. ஈரான் அணு ஆயுதம் வாங்குவதைத் தடுப்பது நீண்ட காலமாக அமெரிக்காவின் கொள்கையாக இருந்து வருகிறது” என்றார்.
US President Donald Trump on Wednesday repeated his claim that he had stopped eight wars, including a “nuclear war” between India and Pakistan -- offering little new. However, in a first, he also claimed that Shehbaz Sharif told him 35 million people would have been killed during Operation Sindoor had he not stepped in.