பாகிஸ்தான் இந்தியாவிற்கு எண்ணெய் விற்கும் நாள் விரைவில் வரலாம்: அதிபர் டிரம்ப் | India | Pakistan | Oil Reserves

பாகிஸ்தானும் அமெரிக்காவும் தங்களது மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை மேம்படுத்துவதில் இணைந்து செயல்படும்.
அதிபர் டிரம்ப் - கோப்புப்படம்
அதிபர் டிரம்ப் - கோப்புப்படம்Hamad I Mohammed
1 min read

இந்தியா மீது 25% இறக்குமதி வரியுடன் கூடுதல் அபராதங்கள் விதிக்கப்படுவதாக நேற்று (ஜூலை 30) அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார்.

மேலும், பாகிஸ்தானின் எண்ணெய் இருப்புக்களை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சி குறித்து குறிப்பிட்ட டிரம்ப், `ஒரு நாள் பாகிஸ்தான் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விற்கக்கூடும்' என்ற கருத்தையும் முன்வைத்தார்.

தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக ஊடக கணக்கில் வெளியிட்ட ஒரு பதிவில், இந்த கூட்டு முயற்சிக்காக அமெரிக்காவும் பாகிஸ்தானும் தற்போது எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

`பாகிஸ்தான் நாட்டுடன் நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை இறுதிசெய்துள்ளோம், இதன் மூலம் பாகிஸ்தானும் அமெரிக்காவும் தங்களது மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை மேம்படுத்துவதில் இணைந்து செயல்படும். இந்த கூட்டு முயற்சியை வழிநடத்தும் எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். யாருக்குத் தெரியும், ஒருவேளை அவர்கள் (பாகிஸ்தான்) எப்போதாவது இந்தியாவிற்கு எண்ணெய் விற்பனை செய்யலாம்’ என்றார்.

மேலும் தனது பதிவில், பல நாடுகளின் தலைவர்களுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து உரையாடியதாகவும், `அவர்கள் அனைவரும் அமெரிக்காவை மிகவும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க விரும்புகிறார்கள்’ என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

குறிப்பாக, `அமெரிக்காவின் வரி குறைப்புக்கு ஈடாக பல நாடுகள் தற்போது சலுகைகளை வழங்குகின்றன’ என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 1 முதல் இந்திய இறக்குமதிகள் மீது 25% வரியுடன், கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று நேற்று (ஜூலை 30) டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் ஆகியவற்றை மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in