
அமெரிக்காவில் தொழில் செய்து வருபவர்கள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்குவதை கிரிமினல் குற்றமாகக் கருதும் அயலக ஊழல் நடைமுறைகள் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப். முன்பு இதே சட்டத்தின் கீழ் தொழிலதிபர் கௌதம் அதானி குற்றம்சாட்டப்பட்டார்.
சர்வதேச அளவில் தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 1977-ல் நிறைவேற்றப்பட்ட அயலக ஊழல் நடைமுறைகள் சட்டம் பாதகத்தை ஏற்படுத்துவதாக இந்த சட்டத்திற்கான தற்காலிக நிறுத்த உத்தரவில் கையெழுத்திடும்போது கருத்து தெரிவித்தார் அதிபர் டிரம்ப்.
மேலும், இந்த சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க அரசின் புதிய அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டிக்கு உத்தரவிட்டுள்ளார் டிரம்ப்.
இந்த சட்டம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த டிரம்ப், `காகிதத்தில் இந்த சட்டம் நன்றாகத் தெரிந்தாலும், நடைமுறையில் பேரழிவை ஏற்படுத்துகிறது. சட்டப்பூர்வமாக அல்லது வேறு விதமாக ஓர் அமெரிக்கர் வெளிநாட்டிற்குச் சென்று அங்கு வணிகம் செய்யத் தொடங்கினால், கிட்டத்தட்ட அது குறித்து விசாரிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
இதே காரணத்தால் அமெரிக்கர்களுடன் வியாபாரம் செய்ய யாரும் விரும்புவதில்லை. இது (அதிபர்) ஜிம்மி கார்டரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது குறித்து கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இது மிகவும் மோசமான சட்டமாகும். இது தேசத்தை பலவீனப்படுத்துகிறது. இதனால் நிறைய ஒப்பந்தங்கள் தடைபடுகின்றன’ என்றார்.
கடந்தாண்டு நவம்பரில், தொழிலதிபர் கௌதம் அதானி, அதானி கிரீன் எனர்ஜி செயல் இயக்குநர் சாகர் அதானி, முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 நபர்கள் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான வழக்குகளை அயலக லஞ்சம் நடைமுறைகள் சட்டத்தின் கீழ் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் ஃபெடரல் நீதிமன்றத்தில், அமெரிக்க நீதித்துறை பதிவு செய்ததாக செய்தி வெளியானது
2020-2024 காலகட்டத்தில், அதிக விலைக்கு சூரிய ஒளி மின்சாரம் வாங்கும் வகையிலான விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிஷா மாநில அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ. 2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் ரூ. 25,000 கோடி முதலீடு பெற்றதாகவும் அந்த வழக்குகளின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், டிரம்பின் உத்தரவை அடுத்து அயலக ஊழல் நடைமுறைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் மறு ஆய்வு செய்யப்படவுள்ளது.
அதானி தொடர்புடைய வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள அமெரிக்கர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டால், இந்த வழக்குகளில் இருந்து அதானியும், அவரது கூட்டாளிகளும் விடுவிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.