
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநிலத்தைச் சேர்ந்த இரு கிராமங்களில், போக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பின் ஜே.ஏ.எஸ். பிரிவு மேற்கொண்ட கொடூரமான தாக்குதலில் குறைந்தபட்சம் 57 பேர் உயிரிழந்துள்ளனர், 70-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
2009 முதல், போகோ ஹராம் தீவிரவாதக் குழு நைஜீரியாவில் மேற்கொண்டு வரும் அட்டூழியங்களால் இதுவரை சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 26 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நைஜீரியா, கேமரூன், நைஜர், சாட் ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்துள்ளனர்.
போக்கோ ஹராம் குழுவிலிருந்து பிரிந்த சிலரால், கடந்த 2016-ல் `இஸ்லாமிக் ஸ்டேட் வெஸ்ட் ஆஃப்ரிக்கா புரோவின்ஸ்’ என்ற பெயரில் புதிய தீவிரவாத அமைப்பு தொடங்கப்பட்டது. போர்னோ மாநிலத்தில் உள்ள அந்த இரு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த தீவிரவாத அமைப்புக்குத் தகவல் அளித்து வந்ததால், அதற்கு போட்டி குழுவான போக்கோ ஹாரம் இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது.
போக்கோ ஹாரம் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பிறகு, கழுத்து அறுபட்ட நிலையில் 57 உடல்கள் இரு கிராமங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் உயிரிழந்த நபர்களின் மொத்த எண்ணிகையை உறுதிசெய்ய முடியவில்லை என்று போர்னோ மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியத்தை அடிப்படையாகக் கொண்ட அரசை நைஜீரியா உள்பட இந்த 4 மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிறுவ போகோ ஹாரம் உள்ளிட்ட தீவிரவாத குழுக்கள் முயற்சி செய்து வருகின்றன. எண்ணை வளம் மிகுந்து இருப்பதால் நைஜீரியா இவர்களின் பிரதானமான இலக்காக உள்ளது.
தீவிரவாத குழுக்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக நைஜீரிய அரசு தகவல் தெரிவித்து வருகிறது. ஆனால் பொதுமக்களுடன், பாதுகாப்பு படையினரையும் தீவிரவாத குழுக்கள் தொடர்ச்சியாகத் தாக்கி வருகின்றன. மேலும், முன்பு இல்லாத அளவுக்கு மத்திய நைஜீரிய பகுதிகளுக்கும் தீவிரவாதத்தின் தாக்கம் பரவியுள்ளது.