
`ஐ.நா அதிகாரிகளை எங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஐ.நா.சபையிலிருந்து நாங்கள் வெளியேறுவது பற்றி யோசிப்பதற்கான நேரம் கணிந்துள்ளது’ என ஐ.நா-வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டான் அறிவித்துள்ளார்.
கடந்த 8 மாதங்களாக மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள பாலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும், அங்கிருக்கும் தீவிரவாத அமைப்பான ஹமாஸுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்தப் போரால் அங்கிருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள வழிவகை செய்யும் தீர்மானத்தை ஜூலை 10-ல் நிறைவேற்றியது ஐ.நா பாதுகாப்பு சபை. `வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், ஐ.நா பாதுகாப்புச் சபையால் முன்மொழியப்பட்டுள்ள போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலின் ஆதரவு உள்ளது’ என இத்தாலியில் நடக்கும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளும் ஓப்பந்தத்தில் இருக்க வேண்டிய ஷரத்துக்களை முன்வைத்து இஸ்ரேலும், ஹமாஸும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முன்பு, `பாலஸ்தீன் பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பை தோற்கடிக்காமல் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்திருந்தார்.
`அடிப்படை சேவைகள் காஸாவில் நின்றுபோயுள்ளதால் அங்கே சுமார் 3.3 லட்சம் டன் அளவு குப்பை சேர்ந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவது மட்டுமல்லாமல், காஸாவில் வசிக்கும் மக்களின் உடல்நலனுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படலாம்’ என ஐ.நாவின் பாலஸ்தீனுக்கான நிவாரண நிறுவனம் அறிவித்துள்ளது.
காஸாவிலிருந்து வெளியேறிய முகமது ஸ்கைக் என்ற நபர், `வடக்கு காஸாவில் உள்ள என் குடும்பத்தினர் பசியால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அங்கு உணவுப் பஞ்சம் நிலவுவது மட்டுமல்லாமல், நிவாரணப் பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது’ என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.