டிரம்ப் வெற்றி: உலகத் தலைவர்கள் சொல்வது என்ன?

"வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்காக நண்பர் டொனால்ட் டிரம்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள்." - இந்தியப் பிரதமர் மோடி
டிரம்ப் வெற்றி: உலகத் தலைவர்கள் சொல்வது என்ன?
1 min read

அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுகிறார். இவருடைய வெற்றிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல் உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி:

"வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்காக நண்பர் டொனால்ட் டிரம்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள். முந்தைய ஆட்சிக் காலத்தின் வெற்றிகளைக் கட்டியெழுப்பியுள்ளீர்கள். இந்தியா - அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாம் மீண்டும் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கியிருக்கிறேன்."

ராகுல் காந்தி:

"அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்துகள். எதிர்கால முயற்சிகளுக்காக கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகள்."

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு:

"வரலாற்றுச் சிறப்புமிக்க மீட்டெழுச்சிக்கு வாழ்த்துகள். வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்பியிருப்பது அமெரிக்காவின் புதிய தொடக்கமாக அமையவுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான சிறப்புமிக்க உறவின் வலிமையான மறுஉறுதிக்கும் புதிய தொடக்கமாக இருக்கும். இது மிகப் பெரிய வெற்றி."

உக்ரைன் அதிபர் விளோதிமிர் ஸெலென்ஸ்கி:

"டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்துகள். அதிபர் டிரம்பின் தீர்க்கமான தலைமையில் வலிமையான அமெரிக்கா எனும் காலத்தை எதிர்நோக்கியிருக்கிறோம். அமெரிக்காவில் உக்ரைனுக்கான இருதரப்பு தொடர் ஆதரவை நாங்கள் சார்ந்துள்ளோம்.

இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பலனளிக்கும் வகையில், அரசியல் மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மையை மேம்படுத்த ஆர்வத்துடன் உள்ளோம்."

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்:

"டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்துகள். 4 ஆண்டுகள் இணைந்துப் பணியாற்றியதைப்போல செயல்படத் தயார். அமைதி மற்றும் வளத்தைப் பெருக்க நம்பிக்கை, மரியாதை, லட்சியத்துடன் செயல்படுவோம்."

பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர்:

வரலாற்றுச் சிறப்பு வெற்றியைப் பெற்று அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருக்கிறேன்."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in