
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்படவேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தொலைபேசி வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் நேற்று (மே 5) பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பிடம் பேசியுள்ளார். இந்தியாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக, பாகிஸ்தான் பிரதமரை அவர் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொலைபேசி உரையாடலின்போது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய ஐநாவின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று குட்டரெஸ் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்கான குட்டரெஸின் ஈடுபாட்டை பிரதமர் ஷெபாஸ் பாராட்டி, அவரது அழைப்பை வரவேற்றதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தைத் தணிப்பதும், எந்தவொரு மோதலையும் தவிர்ப்பதும் அவசியம் எனவும் கூறியுள்ளார்.
மேலும், சுதந்திரமான, வெளிப்படையான, நடுநிலையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு மீண்டும் பாகிஸ்தான் வலியுறுத்தும் நிலையில், தாக்குதல் தொடர்பாக இன்னும் எந்தவொரு ஆதாரத்தையும் இந்தியா வழங்கவில்லை என்றும் பாகிஸ்தான் பிரதமர் பேசியுள்ளார்.
முன்னதாக, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக கடந்த வாரம், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசி வாயிலாக ஆன்டோனியோ குட்டரெஸ் கேட்டறிந்தார். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்பு நிறுத்துவதற்கான இந்தியாவின் நடவடிக்கையை ஆதரிப்பதாக நேற்று (மே 5) அவர் கருத்து தெரிவித்துள்ளார்.