
கோல்ட்பிளே இசை நிகழ்ச்சியில் சக பெண் ஊழியருடன் நெருக்கமாக இருந்த காட்சி அதிகளவில் பரவியதைத் தொடர்ந்து ஆஸ்ட்ரோனோமர் தலைமைச் செயல் அலுவலர் பொறுப்பை ஆண்டி பைரன் ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த நிறுவனம் ஆஸ்ட்ரோனோமர். இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக 2023-ல் பொறுப்பேற்றார் ஆண்டி பைரன். இந்த நிறுவனத்தில் மனிதவள மேலாண்மைப் பிரிவுத் தலைவராக இருப்பவர் கிரிஸ்டின் கேபாட்.
இவர்கள் இருவரும் கோல்ட்பிளே இசை நிகழ்ச்சியில் நெருக்கமாக இருந்துள்ளார்கள். இருவரும் வேறு வேறு இணையர்களைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். அங்கிருந்த கேமிரா இருவரையும் படம்பிடித்துள்ளது. இது பெரிய திரையில் வந்தவுடன், கேபாட் உடனடியாக முகத்தை மறைத்துக்கொண்டார். ஆண்டி பைரன் உடனடியாகக் கீழே குனிந்து மறைந்துகொண்டார்.
கோல்ட்பிளே இசை நிகழ்ச்சியில் முன்னணி பாடகரான கிறிஸ் மார்டின், ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்காக அவ்வப்போது ரசிகர்களை நோக்கி கேமிராக்களை திருப்பி அவர்களைப் பெரிய திரையில் காண்பிப்பது வழக்கம். அப்படி காண்பிக்கும்போது அவர்களைப் பற்றி பேசுவது, சில சமயங்களில் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறுவது உள்ளிட்ட செயல்களில் கிறிஸ் மார்டின் ஈடுபடுவார். இவ்வாறு செய்யும்போது தான் ஆஸ்ட்ரோனோமர் சிக்கியிருக்கிறார்.
இது சர்வதேச அளவில் பேசுபொருளானது. முதலில் தலைமைச் செயல் அலுவலர் ஆண்டி பைரனை விடுப்பில் அனுப்பியது ஆஸ்ட்ரோனோமர் நிறுவனம். இடைக்கால தலைமைச் செயல் அலுவலராக நிறுவனத்தின் இணை நிறுவனர் பீட் டிஜாய் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்ட்ரோனோமர் தலைமைச் செயல் அலுவலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஆண்டி பைரன். ஆண்டி பைரனின் ராஜினாமாவை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஏற்றுக்கொண்டதாக ஆஸ்ட்ரோனோமர் அறிவித்துள்ளது.
பீட் டிஜாய் இடைக்கால தலைமைச் செயல் அலுவலராகத் தொடர்வார் என்றும் புதிய தலைமைச் செயல் அலுவலரைக் கண்டறியும் பணியை நிறுவனம் தொடங்கும் என்றும் ஆஸ்ட்ரோனோமர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Astronomer | Astronomer CEO | Chris Martin | Astronomer CEO Andy Byron | Andy Byron | Pete Dejoy