
காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கும் தங்களுக்கும் துளியும் தொடர்பில்லை என்பதை கோகா கோலா நிறுவனம் விளம்பரம் மூலம் விளக்கமளித்துள்ளது.
வங்கதேசத்தில் கோகா கோலா விற்பனை பெரும் சரிவைச் சந்தித்ததையடுத்து, இந்த விளம்பரம் அங்கு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 7 முதல் காஸா மீது இஸ்ரேல் போர் தொடுக்கத் தொடங்கியதிலிருந்து கோகா கோலா உள்பட 12-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், முஸ்லிம்கள் ஆதிக்கம் கொண்ட நாடுகளில் தங்களுடைய விற்பனையில் சரிவைச் சந்திக்கத் தொடங்கின. இந்தப் போரில் இஸ்ரேல் அரசுடன் தொடர்பு இருப்பதாகக் கருதி இந்த நிறுவனங்களைப் புறக்கணிக்க மக்கள் முடிவெடுத்தார்கள்.
இதன் பகுதியாக கோகா கோலா நிறுவனம் வங்கதேசத்தில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அந்த நாடு ஊடகங்களில் வெளியான தகவலின்படி, கோகா கோலா நிறுவனத்தின் விற்பனை 23 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
இதைச் சரிகட்ட இந்த நிறுவனம் வங்கதேசத்தில் புதிய விளம்பரத்துடன் களமிறங்கியுள்ளது. வங்க மொழியில் 60 நொடிக்கு வெளியான விளம்பரம் மூலம் காஸாவுக்கு எதிரான போரில் தங்களுடையப் பங்களிப்பு எதுவும் இல்லை என்பதை கோகா கோலா நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
விளம்பரத்தில் சொல்லப்படுவது:
பரபரப்பான ஒரு சந்தையில் கடைக்காரர் ஒருவர் தனது கடையில் செல்ஃபோனில் கோக் ஸ்டுடியோ பாடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது இளைஞர் ஒருவர் கடைக்காரரிடம் வந்து பேசுகிறார்.
சோஹைல் என்ற அந்த இளைஞரிடம் கடைக்காரர் நலம் விசாரித்துவிட்டு, கோகா கோலா கொடுக்கவா என்று கேட்பார். இதற்கு அந்த இளைஞர், இதைக் குடிப்பதில்லை என்று பதிலளிக்கிறார். ஏன் என்று கடைக்காரர் கேட்க, இது 'அந்த' இடத்திலிருந்து உற்பத்தியாகி வருகிறது என்று இளைஞர் பதிலளிக்கிறார். எந்த இடம் என்பதை இளைஞர் குறிப்பிடவில்லை.
இதன்பிறகு, இது தவறான தகவல் என கடைக்காரர் விளக்கமளிக்கிறார். மூன்று நண்பர்களிடம் விளக்கமளிப்பதைப்போல விளம்பரம் அமைந்துள்ளது.
இந்த விளக்கத்தில், கோகா கோலா குறிப்பிட்ட அந்த இடத்திலிருந்து வரவில்லை என்றும், கடந்த 138 ஆண்டுகளாக 190 நாடுகளில் கோக கோலா குடிக்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறார். துருக்கி, ஸ்பெயின் மற்றும் துபாயில்கூட கோகா கோலா குடிக்கப்படுவதாகவும், பாலஸ்தீனத்தில்கூட கோகா கோல ஆலை இருப்பதாகவும் கடைக்காரர் விளக்கம் கொடுக்கிறார்.
பாலஸ்தீனத்தில் கோகா கோலா ஆலை இருப்பதாக விளக்கமளித்ததன் மூலம், காஸா மீதான போரில் தாங்கள் எந்தவொரு விதத்திலும் பங்காற்றவில்லை என்பதை கோகா கோலா நிறுவனம் மறைமுகமாக விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த விளக்கத்தை ஏற்று, சோஹைல் என்ற இளைஞர் கோகா கோலா கேட்பதைப்போல விளம்பரத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.