
சீன இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட வரியை 125% ஆக அமெரிக்க அரசு உயர்த்தியுள்ள நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் புத்திசாலி என்று கருத்து தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
75-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர வரி நடைமுறையை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அதே நேரம், சீன இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட 104% வரி 125% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக பேசிய அதிபர் டிரம்ப்,
`ஷி (சீன அதிபர்) புத்திசாலி நபர், நிச்சயமாக ஒரு நல்ல ஒப்பந்தத்தை இறுதி செய்வோம். என்ன செய்யவேண்டும் என்பதை ஷி அறிவார். தனது நாட்டை அவர் நேசிக்கிறார். ஏதாவது ஒரு கட்டத்தில் தொலைபேசியில் பேசுவோம், அதன்பிறகு பந்தயத்தைப் பற்றி பார்க்கலாம்’ என்றார்.
சீன இறக்குமதிகள் மீது வரிகள் உயர்த்தப்பட்ட அதே நேரம், பிற நாடுகள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகளை 90 நாட்களுக்கு அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதன் தாக்கம் பங்குச்சந்தைகள் மீதும் எதிரொலித்தது. இது குறித்துப் பேசிய டிரம்ப்,
`பதிலடி கொடுக்காத நாடுகளுக்காக 90 நாட்கள் நிறுத்தி வைத்துள்ளேன். ஏனென்றால், நீங்கள் பதிலடி கொடுத்தால் நாங்கள் அதை இரட்டிப்பாக்கப் போகிறோம் என்று அவர்களிடம் நான் கூறினேன். அதைத்தான் சீனாவிற்கும் செய்தேன்’ என்றார்.
அமெரிக்காவின் வரி உயர்த்த நடவடிக்கைக்கு பதிலடியாக, அமெரிக்க இறக்குமதிகள் மீதி 84% வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. முன்பு, அமெரிக்க இறக்குமதிகள் மீது 34% வரி விதிக்கப்பட்டிருந்தது. மேலும், இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பிடம் சீனா புகாரளித்துள்ளது.