

சீனாவின் மாபெரும் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஒன்றாகச் சந்தித்துக்கொண்டது பேசுபொருளாகியுள்ளது.
இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில் சீனாவில் மாபெரும் ராணுவ அணிவகுப்பை ஏற்பாடு செய்திருந்தார் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங். ராணுவத்தில் சீனா எதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது, தனது ராணுவ பலம் என்ன என்பதைக் காட்டும் வகையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. அணு ஆயுத ஏவுகணைகள் உள்ளிட்டவையும் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன. ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் பங்கெடுத்தார்கள். 2019-க்குப் பிறகு சீனா நடத்திய மாபெரும் ராணுவ அணிவகுப்பு இது.
ஆனால், ராணுவ அணிவகுப்பைவிட அதிகளவில் பேசுபொருளானது, மூன்று பெரிய உலகத் தலைவர்கள் ஒன்றாக வந்தது தான். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டார்கள். முதலில் கிம் ஜாங் உன்னைக் கைக்குலுக்கி வரவேற்றார் சீன அதிபர் ஷி ஜின்பிங். அடுத்து புதினையும் வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து சீனா, ரஷ்யா மற்றும் வடகொரிய அதிபர்கள் ஒன்றாக நடந்து சென்றார்கள். இவர்கள் மூவரும் பொதுவெளியில் ஒன்றாகச் சந்தித்துக்கொள்வது இதுவே முதன்முறை. அமெரிக்காவால் அதிகளவில் வரி விதிப்பை எதிர்கொண்ட தலைவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் நட்புடன் இருப்பதை உணர்த்துவதனால், இந்தப் புகைப்படம் பெரியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ராணுவ அணிவகுப்பில் புதின் மற்றும் கிம் ஜாங் தவிர 24 நாடுகளின் உலகத் தலைவர்கள் பங்கெடுத்தார்கள். ஈரான் அதிபர், பாகிஸ்தான், வியட்நாம், ஜிம்பாப்வே நாடுகளின் பிரதமர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
எந்தவொரு நாட்டின் அழுத்தத்துக்கும் சீனா இனி அடிபணியாது என சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு மாற்றான ஓர் அமைப்பை உருவாக்கச் செயல்பட்டு வருவதாகவும் ஷி ஜின்பிங் பேசினார்.
பிறகு, புதின் மற்றும் கிம் ஜாங் தனியாகச் சந்தித்துப் பேசிக்கொண்டார்கள். உக்ரைனில் போரிட ராணுவ வீரர்களை அனுப்பியதற்காக வடகொரியாவுக்கு புதின் நன்றி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இதில் பங்கேற்கவில்லை. வடகொரிய அதிபர் இந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
Chinese Military Parade | Vladimir Putin | Kim Jong Un | Xi Jinping | China President | Russia President | North Korea President | China | Russia | North Korea