சீன அரசு விதிக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் திபெத்தியர்களின் நடமாட்டத்தை வெகுவாக பாதித்துள்ளது. ராணுவ துருப்புகள் குவிப்பு, சோதனைச் சாவடிகள், கடவுச்சீட்டு கட்டுப்பாடுகள், சாலை முடக்கம் போன்ற சீன அரசின் கட்டுப்பாடுகள் திபெத்தியர்களின் வெளிநாட்டுப் பயணங்களை முடக்கியுள்ளன.
மிகவும் குறிப்பாக சீனாவின் திபெத் மாகாணத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள சர்வதேச எல்லையை அடைய திபெத்தியர்களுக்குப் பலவகையான கட்டுப்பாடுகள் சீன அரசால் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதில் திபெத்தியர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
இதனால் ஹிமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் செயல்படும், கீழ் திபெத் குழந்தைகள் கிராம பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023-ல் தரம்சாலாவுக்கு 15 திபெத்தியர்கள் மட்டுமே வருகை புரிந்துள்ளனர். 2022-ல் இந்த எண்ணிக்கை 10 ஆக இருந்தது.
ஆனால் 2000-ங்களின் துவக்கத்தில் ஆண்டுக்கு 2000-க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் தரம்சாலாவுக்கு வருகை தந்தனர். 2008-ல் சீன அரசுக்கு எதிராக திபெத்தில் நடந்த மக்கள் போராட்டத்துக்கு பிறகு திபெத்தியர்களின் வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில் கடுமையாக கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தது சீன அரசு.
`2008-க்குப் பிறகு திபெத்தில் இருந்து தப்பித்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. சர்வதேச எல்லைப் பகுதியில் வசித்து வரும் திபெத்தியர்களின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திபெத் தலைநகர் லாசாவைத் தாண்டிச் செல்ல பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அவ்வளவு ஏன், லாசாவுக்கு செல்லவே கட்டுப்பாடுகள் உள்ளன. வெளிநாடுகளில் பிறந்த திபெத்தியர்கள், திபெத்துக்கு வருவதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன’ என்று இது தொடர்பாக பேட்டியளித்துள்ளார் சுதந்திர திபெத்துக்கான மாணவர்கள் அமைப்பின் தலைவர் டென்ஸின் பசாங்