
வங்கதேச விமானப்படைக்குச் சொந்தமான ஒரு பயிற்சி போர்விமானம் இன்று (ஜூலை 21) வங்கதேச தலைநகர் டாக்காவில் இருக்கும் பள்ளியின் மீது மோதியதில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட எஃப்-7 ரக போர்விமானம் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி கட்டடத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, விபத்து நடந்த இடத்திலிருந்து தீ மற்றும் கரும்புகை மூட்டம் வெளியேறிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. மேலும், சம்பவ இடத்தில் மாணவர்கள் சிலர் தீக்காயங்கள் மற்றும் அதிகப்படியான இரத்தப்போக்குடன், திகைத்து ஓடும் காட்சி அந்த காணொளிகளில் பதிவாகியிருந்தது.
உடனடியாக ஆம்புலன்ஸ்கள் கிடைக்காததால், காயமடைந்த மாணவர்களை ராணுவ வீரர்கள் தூக்கிச் சென்று ரிக்ஷா வேன்கள் மற்றும் பிற வாகனங்களில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்று இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருந்தது.
மைல்ஸ்டோன் கல்லூரி உணவகத்தின் கூரையில் இன்று (ஜூலை 21) பிற்பகல் 1.30 மணியளவில் விமானம் மோதியதாக நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகங்களில் தகவல் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட எஃப்-7 ரக போர்விமானம் நடப்பாண்டில் விபத்திற்குள்ளாவது இது 2-வது முறையாகும். கடந்த மாதம், மியான்மர் விமானப்படையின் எஃப்-7 போர் விமானம் அந்நாட்டின் சாகைங் பகுதியில் விபத்துக்குள்ளானதில் விமானி கொல்லப்பட்டார்.
அடுத்தடுத்த விபத்துகளால் சீனாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களின் தரம் குறித்து கவலைகள் எழுந்துள்ளன.