ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்குத் தடை விதித்து அந்நாட்டு தலிபான அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 2021-ல் தலிபான் ஆட்சியைப் பிடித்தது. தலிபான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடுமையான சட்டங்களைப் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. இதனால், பல்வேறு கலாசார, சமூக மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. தலிபான் ஆட்சியில் விளையாட்டிலிருந்து பெண்கள் ஏறத்தாழ முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது செஸ் விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியச் சட்டத்தின்படி செஸ் விளையாட்டு என்பது தடை செய்யப்பட்டது என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
செஸ் விளையாட்டுக்குத் தடை விதிப்பதற்கு முன்பே, செஸ் வீரர்கள் செஸ் விளையாட அனுமதி கோரி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இவர்களுடைய கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தன.
ஆப்கானிஸ்தான் விளையாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகள் மே 11 அன்று செஸ் விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து, செஸ் சார்ந்த செயல்கள் அனைத்துக்கும் காலவரையின்றி தடை விதிக்கப்படுவதாகக் கூறினார்கள். மேலும், மதம் சார்ந்த பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.