கனடா மக்களுக்கு எதிரான குற்றச் செயல்களை ஆதரித்தது மூலம் இந்தியா தவறு செய்துவிட்டது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று (அக்.14) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான அரசு ரீதியிலான உறவில் விரிசலை அதிகரித்துள்ளது.
இந்தியாவிலிருந்து பிரிந்து சீக்கியர்களுக்குத் தனி நாடு உருவாக்கக் கோரி வலியுறுத்திவரும் காலிஸ்தான் போன்ற பிரிவினைவாத அமைப்புகள் பல தசாப்தங்களாக கனடாவில் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டில் செயல்பட்டுவந்த சீக்கிய பிரிவினைவாத தலைவரர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் நிஜார், கடந்த வருடம் ஜூன் மாதத்தில் அந்நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக அப்போது குற்றம்சாட்டினார் அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இதனை அடுத்து இந்தியா கனடா இடையிலான அரசுரீதியிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து நடைபெற்ற சில பேச்சுவார்த்தைகளை அடுத்து உறவுகள் சகஜமாகின.
இந்நிலையில், `கனடா மண்ணில் கனடா மக்களுக்கு எதிரான குற்றச்செயல்களை ஆதரிப்பதில் ஈடுபடலாம் என நினைத்து பெரும் தவறை செய்துள்ளது இந்தியா. பொதுமக்களை அச்சுறுத்துவது மற்றும் கொல்லும் வகையில் நடந்துகொள்ளும் செயல்களை ஒருபோதும் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
எங்களின் கவலைகளை இந்திய அரசாங்கத்துடன் பகிர்ந்துகொண்டோம், எங்களுடன் இணைந்து பணியாற்றும்படி கேட்டுக் கொண்டோம். ஆனால் எங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை’ என நேற்று (அக்.14) பேசினார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
இதனைத் தொடர்ந்து கனடாவில் செயல்பட்டுவரும் இந்தியத் தூதரக அதிகாரிகளை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது மத்திய வெளியுறவு அமைச்சகம். மேலும், இந்தியாவில் செயல்பட்டுவரும் கனடா நாட்டைச் சேர்ந்த 6 தூதர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது வெளியுறவு அமைச்சகம்.
கனடா பிரதமரின் குற்றச்சாட்டை அடுத்து, இது தொடர்பாக விசாரிக்க உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மேலும் நிஜாரின் கொலை தொடர்பான எந்த ஒரு ஆதாரத்தையும் இதுவரை இந்தியாவுடன் கனடா அரசு பகிர்ந்துகொள்ளவில்லை எனவும் மத்திய அரசு நேற்று (அக்.14) தகவல் தெரிவித்ததாக என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.